Friday, February 28, 2014

படித்ததில் பிடித்தது 8 - உயிர் உடைத்த புகைப்படம்!


புலிட்சர் விருதின் (Pulitzer Prize) வாயிலாக உலகப் புகழ்பெற்ற இந்தப் படத்தை எடுத்த கெவின் கார்ட்டர் (Kevin Carter-[1960-1994]) தற்கொலை செய்து கொண்டார். ஏன்?

கெவின் கார்ட்டர்- தென்னாப்பிரிக்காவின் அழகிய ஊரான ஜோஹன்ஸ்பர்க்கைச் சேர்ந்தவர். உலகப் புகழ்பெற்ற புகைப்படக்காரர். எல்லா சிறந்த புகைப்படக்காரர்களைப் போன்றே இவருக்கும் நல்ல புகைப் படங்களை எடுக்க வேண்டுமென்ற ஆசையும் ஆர்வமும் இருந்தன. இந்த ஆர்வம் அவரை நாடு,நகரம்,கிராமம்,காடு, மலை என்று கொண்டு சென்றது.

 
 1993 இல் இந்த ஆர்வம் அவரைத் தனது சக புகைப்படப் பத்திரிக்கையாளர்களுடன் சூடானுக்குக் கொண்டு சென்றது. அப்போது சூடான் வரலாறு காணாத பஞ்சத்தில் சிக்கித் தவித்துக் கொண்டு இருந்தது.

குறிப்பாக சூடானின் தென்பகுதி மக்கள் உண்ண உணவின்றி, பருகநீரின்றி பசி, தாகத்தில் தவித்துக் கொண்டிருந்தனர்.

பசி பஞ்சத்தில் தவிக்கும் மக்களின் நிலைகளைக் காமிராவில் பதிவு செய்ய கெவின் தொலைதூர கிராமங்கள் வரை சென்றார்.

இறுதியாக அவர் முயற்சி கைகூடியது. ஒரு நாள் தன் காமிராவை தோளில் தொங்க விட்டுக் கொண்டு உள்ளத்தை உலுக்கக் கூடிய படத்துக்கான காட்சியைத் தேடியலைந்து கொண்டிருந்தபோது அப்படிப்பட்ட காட்சி தென்பட்டது அவரது நற்பேறு என்றுதான் கூற வேண்டும்.

பசி பஞ்சத்தால் அடிபட்ட நோஞ்சன் நிலையில் உள்ள ஒரு சிறுமி நடக்கக் கூட இயலாத நிலையில், எலும்புக் கூடு போன்ற தன்னுடலை தவழ்ந்து இழுத்துக் கொண்டு மெல்ல மெல்ல ஊர்ந்து செல்வதைக் கண்டார்.

அந்தச் சிறுமி ஐக்கிய நாடுகளின் சபையின் சார்பாக அமைக்கப்பட்டு இருந்த உணவு வழங்கும் முகாமை நோக்கி தள்ளாடியபடி தவழ்ந்து கொண்டிருந்தது உண்மையிலேயே இதயத்தைப் பிழியக் கூடியதாக இருந்தது.

தோளில் இருந்து காமிராவை இறக்கி கோணம் பார்த்த கெவினுக்கு இன்னொரு வியப்பும் காத்திருந்தது.

ஆம்; அந்த எலும்பும் தோலுமான சிறுமிக்கும்ப் பின்னாலேயே சிறிது தொலைவில் ஒரு பிணம் தின்னிக்கழுகும் சிறுமியின் மீது பார்வையை நிலை நிறுத்திக் கொண்டு இருந்தது.

எப்போது சிறுமியின் உடலை விட்டு உயிர் பிரியும்; மீதியுள்ள அந்தத் தோலையும் அதைச் சுற்றி இருக்கும் சிறிது மாமிசத்தையும் எப்போது சாப்பிடலாம் எனக் காத்திருந்தது பிணம் தின்னிக்கழுகு.

கெவின் கேமரா லென்சை கண்ணுக்கு ஒத்திக் கொண்டார்.
கழுகு தன் இறக்கையை விரிக்குமென கார்ட்டர் 20 நிமிடம் காத்திருந்தார். அது விரிக்கவில்லை. எனவே குழந்தையும் கழுகும் இடம்பெறும் வகையில் இக்கோரக்காட்சியைப் புகைப்படமாக எடுத்துவிட்டுக் கழுகை விரட்டினார்.

இப்போது அவரது புகைப்படக்கருவியில் மிக அரிதினும் அரிதான படம் பதிவாகி விட்டது.

இதை விற்றால் நல்ல விலை கிடைக்கும் என்ற மகிழ்ச்சியில் காமிராவைத் தோளில் மாட்டிக் கொண்டு தனது வண்டியை ஸ்டார்ட் செய்தார்; பறந்து விட்டார். இந்த அரிதான படத்தை ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிக்கைக்கு விற்று விட்டார்.

இந்தப் புகைப்படம் 1993 மார்ச் திங்கள் 26 ஆம் நாள் காலை நாளிதழில் முதல் பக்கத்தில் வெளியானது. இந்தப் படத்தைப் பார்த்ததும் ஆயிரக்கணக்கான வாசகர்கள் பத்திரிக்கை அலுவலகத்திற்கு தொலைப்பேசி மூலம் தொடர்புக் கொண்டனர்.

அனைவரும் ஒரே கேள்வியைத்தான் கேட்டனர். புகைப்படத்தில் உள்ள சிறுமி என்ன ஆனாள்? அவள் உயிருடன் பிழைத்தாளா அல்லது இறந்து விட்டாளா?
இந்தக் கேள்விக்கான பதில் பத்திரிக்கையின் தொலைப் பேசி ஆப்ரேட்டரிடமோ படத்தை எடுத்த கெவின் கார்ட்டர்டமோ இல்லை.

1994,மே 23 அன்று பெரும் கை தட்டல்களுக்கு இடையே கெவின் கார்ட்டர் கொலம்பியப் பல்கலைக்கழகத்தின் பிரமாண்டமான அரங்கத்தில் இந்த அரிதான புகைப்படத்திற்கான புலிட்சர் விருதப் பெற்றுக்கொண்டார் இந்த விருது புகைப்படத் துறையில் நோபல் விருதுக்கு இணையானது.

விருது பெற்ற சில நாட்களுக்குப்பின் கெவின் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார்.

கெவினுக்கும் அங்கு இருந்த பிணம்தின்னிக் கழுகுக்கும் என்ன வேற்றுமை? இரண்டும் ஒரே விதமாகத்தான் செயல்பட்டுள்ளனர்.

‘குறைந்தபட்சம் புகைப்பட நிபுணர் கெவின் அந்த சிறுமிக்கு ஒரு வாய் தண்ணீர் அல்லது சாண்ட்விச் தந்து உயிரைக் காப்பாற்றி இருக்கலாம்; அல்லது தனது வலுவான கைகளினால் அந்தச் சிறுமியைத் தூக்கிச் சென்று உணவளிக்கும் அமைப்பு அலுவலகத்தின் வாயிலிலாவது சேர்த்து இருக்கலாம்; கல்லெடுத்து வீசி அந்தக் கழுகையாவது விரட்டி இருக்கலாம்; ஆனால் இவற்றில் எதையும் செய்யாமல் வெறும் ஒரு படத்தை எடுத்தார்; அதை அதிக விலை தந்த பத்திரிக்கைக்கு விற்று விட்டார் என்று ஒருவர் அவர் மீது குற்றம் சாட்டியதுதான் காரணம்.

1994 ஆம் ஆண்டு ஜீலை 27 ஆம் நாள் கார்ட்டர் தனது மகிழுந்தைத் தான் சிறு வயதில் விளையாடிய ஆற்றங்கரையருகில் கொண்டு நிறுத்தினார். மோட்டார் புகைபோக்கிச் செயல்முறையைப் பயன்படுத்திக் கார்பன் மோனாக்சைடு நச்சால் தன் வாழ்வை முடித்துக் கொண்டார். மரணத்தின் போது அவருக்கு வயது 33.

அவரது பிணத்திற்கு அருகில் காவல்துறைக்கு ஒரு கடிதம் கிடைத்தது. அதில் சில வரிகளே இருந்தன. 

"
நான் மனத்தளர்ச்சி அடைந்துள்ளேன். ...தொலைபேசி இல்லாமல்....வாடகைக்குப் பணம்; இல்லாமல்....குழந்தை ஆதரவுக்குப் பணம் இல்லாமல்.....கடனடைக்கப் பணம் இல்லாமல்....பணம்!!!..... நான் கொலைகளின் தெளிவான நினைவுகளாலும் பிணங்கள், கோபம் மற்றும் வலியினாலும் பாதிக்கப்பட்டுள்ளேன். பசியால் வாடும் மற்றும் காயம்பட்ட குழந்தைகளாலும்.... "

இன்று பல்வேறு செய்தி சேனல்களிலும் அடிபட்டும் விபத்துக்குள்ளாகியும் இரத்தச் சிதறலில் துடித்துக் கிடப்பவர்களைப் படங்களாய்ப் பார்க்கும் போதும் அவர்களின் அபயக் குரலைக் கேட்கும் போதும் ஏனோ கெவின் கார்ட்டர் நினைவுக்கு வருகிறார்.



நன்றி:
Wikipedia    Facebook

Wednesday, January 8, 2014

படித்ததில் பிடித்தது 7 - உருவமும் குணமும் (குட்டிக்கதை)

ஒரு வயதான பெண்மணி விமான நிலையத்தில் விமானத்துக்காக காத்துக்  கொண்டிருந்தார்.விமானம் வர தாமதமாகும் என்ற அறிவிப்பைக்  கேட்டவுடன் கடைக்குச் சென்று படிக்க புத்தகமும், சாப்பிட பிஸ்கட்டும் வாங்கி வர சென்றார்.
ஒரு இருக்கையில் அமர்ந்து தான் வாங்கி வந்த புத்தகத்தை பிரித்து படிக்க ஆரம்பித்தார்.அவருக்கு அருகில் ஒரு வாட்ட சாட்டமான ஒருவர் உட்கார்ந்து இருந்தார்.

சிறிது நேரத்தில் அந்த நபர் குட் டே பிஸ்கட் பாக்கெட்டை பிரித்து ஒரு பிஸ்கெட் சாப்பிட்டுவிட்டு காலியாக இருந்த சேரின் மீது வைத்தார்.

அந்த பெண்மணி அவரை பார்த்து முறைத்து விட்டு ஒரு பிஸ்கட் எடுத்து சாப்பிட்டார்.
அந்த நபர் மறுபடியும் ஒரு பிஸ்கெட் எடுத்து சாப்பிட்டார்.

அந்த பெண்மணிக்கு கோபம் வந்து விட்டது. இருந்தாலும் அந்த நபரின் உருவத்தை பார்த்துவிட்டு எதுவும் சொல்லாமல் இவரும் ஒரு பிஸ்கட் எடுத்து சாப்பிட்டார்.

அந்த முரட்டு மனிதன் மறுபடியும் ஒரு பிஸ்கட் எடுத்து சாப்பிட்டார்.

"ச்சே! பிஸ்கட்டை திருடி திண்கிறானே, இவனுக்கு கொஞ்சம்
கூட வெட்கம்,மானம் இல்லையா?" என்று நினைத்து கொண்டே, அந்த பெண்மணி தானும் ஒரு பிஸ்கட் எடுத்து சாப்பிட்டார்.

இப்படியே இருவரும் மாறி, மாறி பிஸ்கட் சாப்பிட்டு கொண்டே இருந்தனர்.கடைசியாக ஒரே ஒரு பிஸ்கட் இருந்தது.

இருவரும் அந்த பிஸ்கட்டை பார்த்தனர்.சிறிது நேரம் அமைதியாக இருந்தனர்.

அந்த முரட்டு மனிதன் அந்த பிஸ்கட்டை இரண்டாக உடைத்து , பாதியை அவர் சாப்பிட்டு விட்டு மீதியை அந்த இருக்கையில் வைத்தார்.

அந்த பெண்மணி மீதி பாதி பிஸ்கட்டை சாப்பிட்டு விட்டு விமானம் ஏற கிளம்பி விட்டார்.

விமானத்தில் ஏறி அமர்ந்தவுடன், என்ன மோசமான மனிதன் பிஸ்கெட் வேண்டும் என்றால் கேட்டு வாங்கி சாப்பிட வேண்டியது தானே.

இப்படியா திருடி திண்பது,உலகத்தில் இப்படியும் சில ஜென்மங்கள் இருக்கத்தான் செய்கின்றன என்று நினைத்துக் கொண்டே தண்ணீர் குடிப்பதற்கு பையில் கையை விட்டார்.

அவருக்கு ஒரே ஆச்சரியம்,இவர் கடையில் வாங்கிய பிஸ்கட் பாக்கெட் பையில் அப்படியே இருந்தது.

அப்படின்னா நான் இவ்வளவு நேரம் அங்கு சாப்பிட்ட பிஸ்கட் அந்த முரட்டு மனிதனுடையதா…

நான் தான் பிஸ்கெட் திருடி சாப்பிட்டேனா…என்று சொல்லிக்கொண்டே தன் செயலுக்காக வருந்தினார்.

இந்தக் கற்பனைக் கதை நமக்கு உணர்த்துவது,

”எப்பவுமே ஒருவருடைய உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது.

அவர் நல்லவராகவும் இருக்கலாம்,மோசமானவராகவும் இருக்கலாம்.

ஏன் அவர் நம்மைக் காட்டிலும்,

எல்லாவற்றிலும் ஒழுக்க சீலராகவும்,

உயர்ந்த பண்புடையவராகவும் கூட இருக்கலாம்.

அடுத்தவரிடம் நாம் அதிர்ச்சியடைகிற அளவுக்குப் பார்க்கிற குறை,

பெரும்பாலும் நாம் சுமந்து கொண்டிருப்பது தான்.

என்ன கொஞ்சம் வித்தியாசமாக, மறைவாக, அல்லது வேறு விதமாக நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிற அளவுக்கு இருப்பது தான்!

நம்மிடம் இருக்கும் குறை பெரிதாக, தீமை இல்லாததாகத் தெரிவது, அடுத்தவரிடம் பார்க்கும் போது பூதாகாரமாகத் தெரிகிறது!

எனவே,

அடுத்தவர்கள் மேல் குறை காணும் முன் நாம் அதற்கு முற்றிலும் தகுதியானவரா என்று ஒரு நொடி நினைத்துப் பார்க்க வேண்டும்.....!

Wednesday, January 1, 2014

புதுவருடமே வருக வருக!

 தமிழர்கள் என்றால் தமிழ் புத்தாண்டை மட்டுமே சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்றில்லை.தம்மையும் பிற இனத்தையும் அவர்களின் கலாச்சாரத்தையும் என்றுமே தமிழன் மதிக்கத் தவறியதில்லை.
ஆகவே,ஆங்கில புத்தாண்டைக் கொண்டாடுவதில் எந்த பாவமும் நம்மை வந்தடையாது.அதை விடுத்து  கொண்டாட்டத்தால் தமிழ் கலாச்சாரம் குழையும்,அழிந்துவிடும் என்றெல்லாம் கதை கிளப்புவது நன்றல்ல!


நீண்ட விடுப்பில் இருந்து இன்றுதான் அலுவலகம் வந்தடைந்தேன்.புத்தாண்டுக்கு லீவா இருக்கும்.எதுக்கும் ஆபிஸ் ல கேளு! என்று அம்மா நேற்று சொன்னபோது எனக்கே சந்தேகம் வந்துவிட்டது.போன வருஷ பிறப்பன்று அலுவலகம் வந்தது நினைவிருக்கிறது.இருப்பினும் நண்பனைக் கேட்டு உறுதிசெய்துகொண்டேன்.

காலைப் பனியில் காதுகளை மூடிக்கொண்டு ஒருமணி நேரம் பயணம்.ஜன்னல் காட்சிகளில் எதோ புதுமை இருப்பதாகவே தெரிந்தது.என்றும் காணப்படும் வாகன நெரிசல்,குழம்பிய முகங்கள் என எதுவும் தென்படவில்லை.சாலை நெடுக Happy New Year வாழ்த்து செய்திகள் சுண்ணாம்பினால் எழுதப்பட்டிருந்தது.இரவுக்கொண்டாட்டத்தில் வெடிக்கப்பட்ட பட்டாசுக் காகிதங்கள் சாலையின் ஓரங்களை நிறைத்திருந்தது.

புதுவருடம் ஒவ்வொருவருக்கும் விதவிதமாய் விடிகிறது.சிலரின் காதல் நேற்று இரவில் சொல்லப்பட்டிருக்கும்,அதே போல நாளை புதிய வாகனம் வாங்கி வருடத்தை வண்டி எண்ணாக பதிவு செய்ய சிலர் யோசனை செய்துகொண்டிருப்பார்கள்,பலரின் புதிய தொழில் முயற்சிகள் புதிய வருடத்தில் சந்தைப்படுத்தப்படும்! இப்படி புத்துணர்வில் பிறக்கிறது புதுவருடம்.கண்களை மூடி யோசித்துப்பார்த்தால், ஏதோ வழி தெரியாத நீண்ட சோலைக்குள் பயணம் செய்ய தயாராகிக் கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது.அனைவரும் அப்படித்தான் சோலைக்குள் நுழைகிறோம்.பலர் பாதை தவறிவிடுகிறார்கள். சிலரே நினைத்ததை அடைகிறார்கள்.

உங்கள் எண்ணங்கள் ஈடேற என் இனிய வாழ்த்துகள்.இது ஒரு நல்ல விடியல்.இனிய ஆண்டின் இன்பமயமான ஆரம்பம்! அனுபவியுங்கள் உங்கள் ஸ்டைலில் :)

தத்துவம்:
"உன்னை நாணயமான மனிதனாக்கிகொள்! அதன்மூலம் உலகில் அயோக்கியன் எண்ணிக்கையில் ஒன்று குறைந்துவிட்டது என நீ தைரியமாக நம்பலாம்! "


அன்புடன் 
ராஜ்குமார்.

Monday, December 2, 2013

படித்ததில் பிடித்தது 6 - குட்டிக்கதைகள்

                         1. ஐந்தில் வளையாதது!

போதை போன்ற தீய பழக்கங்களை உடனே விட்டொழிக்க சொன்னார் ஆசிரியர்.

மாணவர்கள்," நாங்கள் சிறுவர்கள்.. போக போக விட்டுவிடுவோம்", என்றார்கள்

ஆசிரியர் பள்ளி தோட்டத்துக்கு மாணவர்களை அழைத்து சென்றார்

தோட்டத்தில் இருந்த புற்களை பிடுங்க சொன்னார் சில நிமிடத்தில் செய்து முடித்தனர்.

பின்பு அங்கிருந்த செடிகளை களைய சொன்னார் இதுவும் சில நிமிடத்தில் முடிந்தது.

பிறகு வேலி அருகே இருந்த மரங்களை பிடுங்க சொன்னதும் மாணவர்கள் திரு திருவென முழித்தார்கள் .

ஆசிரியர் சொன்னார்,"தீய வழக்கங்களும் இப்படித்தான் புற்கள் செடிகள் போன்று சிறிதாக இருக்கும் போதே அழித்து விடுங்கள் வளர்ந்து மரமாகி விட்டால் அது நம்மை அழித்துவிடும்!".


                           2.   புத்தி உள்ளவன் பிழைத்து கொள்வான்!

ரஷ்ய ஜெயிலில் மூன்று தூக்குதண்டனைக் கைதிகள் இருந்தனர்.இறக்குமுன் அவர்களின் கடைசி மூன்று ஆசைகள் என்ன என்று கேட்கப்பட்டது.

முதல் கைதியின் ஆசை:நல்ல பெண்,நல்ல மது ,லெனின் சமாதிக்கு அருகில் புதைக்கப்பட வேண்டும்.மூன்று ஆசைகளும் நிறைவேற்றப்பட்டன.

இரண்டாவது கைதியின் ஆசைகள் ;நல்ல பெண்,நல்ல உணவு,ஸ்டாலின் சமாதிக்கருகில் புதைக்கப்பட வேண்டும்.அவனுடைய ஆசைகளும் நிறைவேற்றி வைக்கப்பட்டன.

மூன்றாவது கைதி தனது முதல் ஆசையாக மாம்பழம் கேட்டான்.அப்போது மாம்பழ சீசன் இல்லை.எனவே தூக்கு தண்டனை ஆறு மாதம் ஒத்தி வைக்கப்பட்டது.

ஆறு மாதத்திற்குப்பின் மாம்பழம் வாங்கிக் கொடுத்து இரண்டாவது ஆசையைக் கேட்டனர்.செர்ரிப் பழம் என்று பதில் வந்தது.அப்போது செர்ரிப் பழ சீசன் இல்லை என்பதால் மறுபடியும் தூக்கு தண்டனை ஆறு மாதம் தள்ளி வைக்கப்பட்டு,பின் செர்ரிப்பழம் வாங்கிக் கொடுக்கப்பட்டது.

மூன்றாவது ஆசையாக அவன் சொன்னான்,''என் உடல் தற்போதைய அதிபரின் சமாதிக்கருகில் புதைக்கப்பட வேண்டும்.''அதிகாரிகள் அதிர்ந்துவிட்டனர்,''என்ன சொல்கிறாய்,நீ?அவர் உயிருடன் அல்லவா இருக்கிறார்! ''கைதி அமைதியாகச் சொன்னான்,''அவர் இறக்கும் வரை நான் காத்திருக்கிறேன்" :).

 

Wednesday, November 27, 2013

கையெழுத்து!

நம் அன்றாட வாழ்க்கையில் பலவித மனிதர்களை ,பலவித காலகட்டங்களில் சந்திக்கின்றோம் .அவர்கள் பின்னாளில் நம் நண்பர்களாகவோ எதிரிகளாகவோ அல்லது  எவ்வித உறவுப்பிணைப்பும் இல்லாதவர்களாகவோ அடையாளப்படுத்தப் படுகின்றனர்.என்னைப்பொறுத்தவரையில் அவர்கள் எந்த வகையினராக இருந்தாலும் அவர்களிடம்  நாம் கற்றுக்கொள்ள ஒரு பாடமும் கேட்டறிய ஒரு கதையும் இருக்கவே செய்கிறது.

         அவ்வாறு என் வாழ்க்கையில் பலவித நல்லவை,கெட்டவைகளை பலரும்  அறியவைத்துள்ளனர்.நான் ஆறாம்வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்.அந்த வருடம் இதற்கு முந்தியவை போல மகிழ்ச்சியான வருடமாக இல்லை.காரணம் இருவர்.அவர்கள்  என் வகுப்பில் சேரும்வரை முதலிடம் பிடித்திருந்த நான்,பிறகு மூன்றாம் இடம் தள்ளப்பட்டேன்.என்னால் அவர்களைப் போல ஏன் படிக்கமுடியவில்லை? என்ன ஆயிற்று எனக்கு என கேள்விகேட்டபடி படுக்கையில் தூக்கமின்றி துவண்டேன்.பெருக்கல் வாய்ப்பாடு மனப்பாடம் செய்ய முடியாமல் அடி வாங்கிய வருடமும் அதுதான்.ஆசிரியைகள் பள்ளி முடிந்த பிறகு எடுக்கும் சிறப்பு வகுப்புகளுக்கு செல்லத்  துவங்கினேன்.இருந்தாலும் கணக்குப்பாடம் என்பது அவ்வளவு பிடிப்பதாக இல்லை.

         ஏழாம்வகுப்பும் எப்படியோ கடந்து சென்றது.எட்டாம் வகுப்பு படிக்கையில் கிட்டத்தட்ட  என் எண்ணங்கள் முற்றிலும் மாறியிருந்தன.மதிப்பெண்கள் பற்றியோ எத்தனையாவது இடம் பிடிக்கிறேன் என்பதைப் பற்றியோ நான் கவலைப்படுவதே இல்லை.காரணம்  எனக்கு அமைந்த நண்பர்கள்.அவர்களை விட அதிக மதிப்பெண் என்பது மட்டுமே எனக்கு போதுமானதாக இருந்தது.நன்றாக படிப்பவர்களை நண்பர்களாக்கிக் கொண்டேன்.கணித வகுப்புகளில் கொடுக்கும் வீட்டுபாடங்களை, சிந்திக்காமல் அச்செடுக்க அவர்கள் மிகவும் உதவினார்கள்.அது போலவே, வகுப்பில் தினமும் வைக்கப்படும் தேர்வுத்தாள்களில் மதிப்பெண் இடுபவர்களும் அவர்களே என்பதால்,ஆசிரியையிடம் அடிவிழாமல் காப்பாற்றும் மதிப்பெண்கள் எனக்குக் கிடைப்பதை அவர்கள் உறுதி  செய்துவிடுவார்கள்.அவர்களில் முக்கியமானவர்கள் யமுனாதேவி மற்றும் கவிதா.


           கவிதா என் சொந்த ஊரைச் சேர்ந்த மாணவி.பக்கத்து வீடு கூட.ஆகவே படிப்பு சார்ந்த  குறிப்பாக கணிதம் சார்ந்த உதவிகள் நிறைய கிடைத்தன.சிலரைப் பற்றி நாம் நினைப்பது ஒன்றாக இருக்கும்.ஆனால் உண்மை வேறொன்றாக இருக்கும்.கவிதா மீது  முதலில் எனக்கு இருந்த கோபம் இப்போது மரியாதையாக மாறி இருந்தது.கவிதாவின் அழகான தமிழ் கையெழுத்து எனக்கு மிகவும் பிடிக்கும்.,சீரான இடைவெளியில்,நேர்த்தியாக  அழுத்தமாக எழுதப்படும்  அந்த வரிகளைக் கண்டு வியந்த உணர்வு இன்றும் அப்படியே இருக்கிறது.கவிதாவின் நோட்டு புத்தகங்களை வாங்கி வந்து,அவள் எழுதியதைப்  போலவே எழுத முயற்சித்தேன்.இரண்டு மூன்று வரிகள் அதேபோல எழுதிவிடுவேன்.பிறகு பழையபடி கையெழுத்து குழைந்துவிடும்.அப்படி எழுதுவதற்கு அதிக நேரம்  தேவைப்பட்டது.அடுத்த நாள் முதல், வகுப்புகளில் கவிதா எழுதுவதை உன்னிப்பாகக் கவனித்தேன்.பேனா பிடிப்பது,எந்தப்பக்கம் சாய்த்து எழுதுகிறாள் வார்த்தைகள் எப்படி  நேராய் அமைகின்றன என ஒவ்வொன்றையும் கூர்ந்துகவனிக்க துவங்கினேன்.

         அந்த வருடம் கல்வி சிறிது முன்னேற்றத்துடன் முடிவடைந்தது.வேறு பள்ளிக்கு மாற்றல் ஆனேன்.இன்னும் "கவிதாவின் கையெழுத்து" எனக்கு  பரிச்சயப்படவில்லை.நான் பத்தாம்வகுப்பு படிக்கும்போது,எனக்குள் கிடந்த கையெழுத்து ஆசை மீண்டும் தலைதூக்கியது.தினமும் பலமணிநேரம் அதற்காக பயிற்சி செய்தேன்.வீட்டுப்பாடம்  செய்யும்போதும்,பரிச்சைக்கு முன்னர் எழுதிப்பார்க்கும் போதும் கையெழுத்தின் மேன்மையில் அதிகம் கவனம் செலுத்தத் துவங்கினேன்.
    
          பத்தாம் வகுப்பு இறுதி தேர்வு  எழுதுகையில் ஓரளவு நன்றாகவே தேர்ந்துவிட்டேன்.கவிதாவின் எழுத்துகளுடன் ஒப்பிட முடியாது எனினும் நல்ல வடிவாக எழுதப் பழகியிருந்தேன்.

பத்துவருடங்களுக்கு  மேல் ஆகின்றன.இன்றும் என் கதை கவிதைகளைப் படிப்பவர்கள் "உன் கையெழுத்து அழகாக இருக்கிறது !" எனக் கூறினால்,சட்டென நினைவில் வந்துசெல்கிறாள் கவிதா  என்ற அந்தத் தோழி!

Wednesday, July 17, 2013

குழந்தைகள் முன்னிலையில் செய்யக்கூடாத சில!

(குறிப்பாக பெண்களுக்கு)
1. கணவன்-மனைவி சண்டை சச்சரவு குழந்தைகளுக்குத் தெரியக் கூடாது. அவர்கள் முன்னிலையில், சண்டையிட்டுக் கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

2. குழந்தைகள் முன்னிலையில், பிறரை பற்றி தேவையில்லாமல் விமர்சிக்காதீர்கள். உதாரணமாக, "உங்கள் பிரண்ட் மகா கஞ்சனாக இருக்கிறாரே' என்று நீங்கள் உங்கள் கணவரிடம் கேட்டதை நினைவில் வைத்துக் கொண்ட குழந்தை, அவர் வரும் போது, "அம்மா கஞ்சன் மாமா வந்து இருக்கிறார்' என்று சொல்ல நேரிடலாம்.

3. தீய சொற்களை பேசுவதை தவிருங்கள். அதிலும் குழந்தைகள் முன்னிலையில் பேசுவதை அறவே தவிருங்கள். நீங்கள் பேசுவதை கவனித்து தான் உங்கள் குழந்தை பேசுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

4. சிறு குழந்தைகளை மிரட்டும் போது, "கொன்னுடுவேன், தலையை திருகிடுவேன், கையை உடைப்பேன்' போன்ற வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள்.

5. சில தாய்மார்கள் சில விஷயங்களை தங்கள் கணவரிடம் இருந்து மறைக்க விரும்புவர். எனவே, குழந்தைகளிடம், "அப்பாகிட்டே சொல்லிடாதே' என்று கூறுவர். அப்படி நீங்கள் சொன்னால், உங்கள் குழந்தை தன்னை பெரிய ஆளாக நினைத்துக் கொண்டு, உங்கள் கணவர் முன்னிலையிலேயே "அப்பாக்கிட்ட சொல்லிடுவேன்' என்று மிரட்டும்.

6. குழந்தைகளிடம் அவர்கள் டீச்சரைப் பற்றி கமென்ட் அடிக்கக் கூடாது. "உங்க டீச்சருக்கு வேற வேலை இல்லை; உங்க டீச்சருக்கே ஒண்ணும் தெரியலே' போன்ற வார்த்தைகளை அவர்களிடம் கூறக் கூடாது. அப்படி கூறினால், குழந்தைகள் அவர்கள் ஆசிரியர் மீது வைத்திருக்கும் மதிப்பு குறைந்து, அவர்கள் படிப்பை பாதிக்க வழிவகுக்கும்.

7. குழந்தைக்கு எதற்கெடுத்தாலும் காசு கொடுத்துப் பழக்கக் கூடாது. அதிலும் கமிஷன் கொடுத்து பழக்கப்படுத்துவது கூடவே கூடாது. " கடைக்குப் போய் ஷாம்பூ வாங்கிட்டு வந்தால், உனக்கு சாக்லேட் வாங்க காசு தருவேன்' என்பது போல பேசுவதை தவிருங்கள். இல்லாவிட்டால், நாளடைவில் ஒவ்வொன்றிற்கும் காசை எதிர்பார்க்க ஆரம்பித்து விடுவர்.

8. குழந்தைகள் முன்னிலையில் தரமான படங்களையே பார்க்க வேண்டும். நீங்கள் வாங்கும் புத்தகங்களும் தரமாக இருக்கிறதா என்று பார்த்து வாங்கவும்.

9. உங்கள் குழந்தையுடன் அடுத்த வீட்டுக் குழந்தையை ஒப்பிட்டுப் பேசாதீர்கள். அப்படி பேசினால், குழந்தையின் மனதில் தாழ்வு மனப்பான்மை வளரும்.

10. படிப்பு விஷயத்தில் குழந்தைகளைக் கண்டிக்கும் போது, "பாசிடிவ் அப்ரோச்' இருக்க வேண்டும். "நீ நன்றாக படித்தால் டாக்டராவாய்; நன்றாக விளையாடு பெரிய ஸ்போர்ட்ஸ்மேன் ஆகலாம்' என்று கூறி, ஊக்கப்படுத்த வேண்டும். "நீ படிக்கிற படிப்புக்கு பியூன் வேலை கூட கிடைக்காது. இந்த மார்க் வாங்கினா மாடு தான் மேய்க்கலாம்' என்றெல்லாம் பேசி, பிஞ்சு மனதை வேதனை அடைய செய்யக் கூடாது.

11. குழந்தை முன்னிலையில் உங்கள் கணவர், வீட்டில் இருக்கும் பிற நபர்கள் சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது, புகையிலை போன்ற செயல்களை மேற்கொள்ள ஒரு போதும் அனுமதிக்காதீர்கள்.

Monday, April 22, 2013

படித்ததில் பிடித்தது 5 - ஆசைகள்



மாவீரன் அலெக்ஸாண்டரின் கடைசி ஆசைகள்


மாவீரன் அலெக்ஸாண்டர் எல்லா நாடுகளையும் கைப்பற்றி விட்டு தாய்நாடு திரும்பும் வழியில் நோய்வாய்ப்பட்டார். பல மாதங்கள் ஆகியும் அவருக்கு அந்த நோய் தீரவில்லை. சாவு தன்னை நெருங்குவதை உணர்ந்தார் அவர்.

ஒருநாள் தன்னுடைய தலைமை வீரர்களை அழைத்து, "என்னுடைய சாவு நெருங்கி விட்டது. எனக்கு மூன்று ஆசைகள் உள்ளன. அவற்றை நீங்கள் கண்டிப்பாக நிறைவேற்றி வைக்க வேண்டும்" என்று கட்டளையிட்டார்.

அவர்களும் அவற்றை நிறைவேற்றுவதாக வாக்களித்தனர்.

முதல் விருப்பமாக, "என்னுடைய சவப்பெட்டியை எனக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் மட்டுமே தூக்கி வர வேண்டும்."

இரண்டாவது, 'என்னைப் புதைக்கும் இடத்திற்குச் செல்லும் வழியானது நான் சம்பாதித்து வைத்த, விலைமதிப்பற்ற கற்களால் அலங்காரம் செய்யப்பட வேண்டும்."

மூன்றாவதாக, "என் கைகள் இரண்டையும் சவப்பெட்டிக்கு வெளியில் தெரியுமாறு வைக்க வேண்டும்."

வீரர்களுக்கு இந்த ஆசைகள் வித்தியாசமாகத் தெரிந்தன. என்ன காரணமாக இருக்கும் என்று கேட்கப் பயந்தார்கள்.

அதில் ஒருவன் தைரியமாக முன்வந்து, "அரசே! நாங்கள் தங்கள் ஆசையைக் கண்டிப்பாக நிறைவேற்றுகிறோம். ஆனால், இதற்கான காரணத்தை தாங்கள் விளக்க வேண்டும்" என்று கேட்க, அலெக்ஸாண்டர் அதற்கு விளக்கமளித்தார்.

1.
என்னுடைய சவப்பெட்டியை மருத்துவர்கள் தூக்கிச் செல்வதால், உலகில் உள்ள எல்லோரும் ஒரு விஷயத்தை அறிந்து கொள்வார்கள். மருத்துவர்களால் எந்த ஒரு நோயிலிருந்தும் ஒரு உயிரை நிரந்தரமாகக் காப்பாற்ற முடியாது. மரணத்தை அவர்களால் நிறுத்த முடியாது.

2.
வாழ்க்கையில் எவ்வளவு பணமும், நாடுகளும், இன்ன பிற செல்வங்களும் சம்பாதித்தாலும், அவற்றை உன்னுடன் எடுத்துச் செல்ல முடியாது. அது சவக்குழி வரை மட்டும்தான்! மனிதர்கள் வீணாக அதன் பின்னால் செல்ல வேண்டாம் என்பதைத் தெரியப்படுத்துவதற்காக!

3.
உலகையே வென்றவன் சாகும்போது கைகளில் ஒன்றுமில்லாதவனாகத்தான் இருக்கிறான் என்று அறிந்து கொள்வதற்காக.