Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Friday, April 19, 2013

கன்னித்தமிழே வருக வருக!

நம் அனைவருக்குமே தெரிந்த ஒரு பொது அறிவு பதில், "தமிழ் என் தாய்மொழி!".சில பேருக்கு இது மறந்துவிட்டது என நினைக்கிறேன்.பாவம் அவர்கள் என்ன செய்வார்கள்?ஆங்கிலமொழியின் அதீத பயன்பாட்டினால் தமிழ் பேசவும்,தமிழைப் பற்றி சிந்திக்கவும் நேரம் கிடைப்பதில்லை.வேற்று மொழி கற்கும்போது கூட,அவர்கள் சொல்லும் முதல் அறிவுரை,தாய்மொழியின் வீச்சினைக் கட்டுப்படுத்துங்கள் என்றுதான்.(Kill your Mother toungue influence -Eg.Think in English, Speak in English).கட்டுப்படுத்திக் கட்டுப்படுத்தி, இன்று தாய்மொழி காணாமல்போய்விட்டது பலரின் நாவில்.




ஒருநாள்,உணவு இடைவேளைப் பொழுதில் இதுபற்றிய பேச்சு எழுந்தது."தமிழ் விழிப்புணர்வு இன்றைய இளைய சமுதாயத்தில் ஏற்பட்டிருக்கிறதா?" என்று.அனைவரும் ஆம் என்றே சொன்னார்கள்.கமலுக்கு ஆதரவாய் தமிழர் அனைவரும் உன் பின்னால் நிற்போம் என்கிறது ஒரு கூட்டம்

தனி ஈழம் எங்கள் கொள்கை.அங்கிருப்பவர்களும் எங்கள் உடன்பிறப்புகளே என்று பொங்கி எழுகின்றது ஒரு கூட்டம்."சென்னை சூப்பர் கிங்க்ஸ்-க்கு பெரியவிசில் போடு" என ஆர்ப்பரிக்கிறது ஒரு கூட்டம். 

எப்படியோ,தமிழன் என்ற வார்த்தை ஏதோ ஒரு வகையில் அனைவரிடமும் கொண்டுசெல்லப்பட்டிருக்கிறது என்பது மகிழ்ச்சியான செய்தி.அதேபோல, தமிழ் மொழிப்பற்று காட்டுத்தீயாய் பரவி வருவது இன்னொரு இனிப்புச் செய்தி.சமூக வலைதளங்கள்,இணையங்கள் மற்றும் கல்லூரி மாணவர்களின் தமிழ் சங்கங்கள்,தொலைக்காட்சி என மொழி விழிப்புணர்வினை ஏற்படுத்த ஏராளமான ஊடகங்கள் தற்போது காணக்கிடைக்கின்றன.உதாரணமாக,

சில உணர்வுகள் எல்லை மீறும்போது,அதன் விளைவுகள் கொஞ்சம் அச்சத்திற்குரியவையே.தமிழ்பற்று என்ற பெயரில் நாம் பார்ப்பவற்றையெல்லாம் மொழிமாற்றம் செய்யத்துணிகிறோம்.உதாரணமாக,FaceBook என்பதை முகப்புத்தகம் என்று அழைப்பதைப் பார்க்கமுடிகிறது.அது ஒரு நிறுவனத்தின் பெயரல்லவா?அதை உள்ளபடி உபயோகிப்பதே சிறப்பு! All clear Shampoo' என்பதை "எல்லாம் முடிந்தது" என்றோ,Microsoft என்பதை "சின்ன மென்மை" என்றோ நாம் அழைக்கிறோமா?மொழிபெயர்ப்பினை பெயர்களுக்கு பயன்படுத்த வேண்டியதில்லை.இதுபோன்ற மாற்றங்கள் கவனிக்கப்படவேண்டியவை.

Google தேடுதளத்தில்,"தமிழ்" என்று தேடியதில் கிடைத்த செய்திகள் இங்கே.



அதேபோல"English" என்று தேடியதில் கிடைத்த செய்திகள் இங்கே.


படங்களாகட்டும்,இணையபக்கங்களாகட்டும், தமிழ் இலக்கியம் தொடர்பானவை மிகக் குறைவே.இரண்டுபக்கங்கள் தாண்டினால்,இன்னும் படுமோசமான முடிவுகளைப் பார்க்கமுடிகிறது.
தமிழ்மொழியின் இணைய இலக்கியப் பதிவுகள் அதிகரிக்கப்பட வேண்டும்.தமிழ் கற்கும் தளங்கள் இன்னும் அதிகமாக துவக்கப்பட்வேண்டும்.நாளிதழகள் மற்றும் தொலைக்காட்சிகள் போல, தமிழ் பற்றிய அனைத்து புத்தகங்களும், இணையத்தில் படிக்கும்படி செய்யப்படவேண்டும்.

இன்றைய தமிழ்மொழி நிலை பற்றீய இன்னுமொரு பதிவு.இங்கே

இன்னும் பேசலாம் தமிழ்மொழியை சரியான பாதையில் வேர்விடவைக்க.

- அன்புடன் ராஜ்குமார் 

Wednesday, November 21, 2012

சினிமா கனவுடன் அலைபவர்களுக்கு.. - அன்புடன் மகேந்திரன்

 ஆனந்த விகடன் - 19.9.99



னக்கு அறிவுரைகளில் நம்பிக்கை இல்லை. சிநேகிதமாக எனது எண்ணங்களைப் பகிர்ந்துகொள்வதுதான் எனக்குப் பிடிக்கிறது.

 நீ கனவு கண்டுகொண்டு இருக்கிற துறையில் நுழைந்து, நான் பெற்ற அனுபவங்களும் சிந்தனைகளும்தான் இந்தப் பகிர்தலுக்கான எனது தகுதி. நான், உன் மீதுகொண்ட அன்பும் அக்கறையும்தான் எனது இந்தப் பகிர் தலுக்கான காரணம்.

நான் திட்டமிட்டு இங்கே வரவில்லை என்றாலும்கூட, எனக்கும் கனவு இருந்தது. அது சினிமா குறித்த கனவு. ஒரு சினிமா எப்படி இருக்க வேண்டும் என்கிற கனவு. இந்த சினிமா எனக்கானது இல்லை, என் சமூகத்துக்கானது இல்லை என்று, அன்றைய சினிமாக்கள் மீதான எனது அதிருப்தியில் இருந்து உருவான கனவு. எனது திரைப்படங்கள் அப்படித்தான் உருவாகின. இன்றைக்கு சினிமாவைத் தேடி வருகிற இளைஞர்களின் கனவு, அப்படிப்பட்ட கனவா?

சினிமா ஒன்றும் தேவலோகமும் அல்ல. சினிமா சார்ந்த நபர்கள் ஒன்றும் தேவ தூதர்களும் அல்ல. இதைப் புரிந்துகொண்டால், எளிய விஷயங் களைப் பார்த்து ஆச்சர்யப்படத் தேவை இருக்காது.

நமது நாட்டில் எவ்வளவோ பேர் பட்டினிகிடக்கிறார்கள். விவசாயம் பண்ணுகிறவன் பட்டினி கிடக்கிறான். அன்றாடங்காய்ச்சி பட்டினிகிடக்கிறான். மாதச் சம்பளம் வாங்குபவன்கூடச் சமயங்களில் மாதக் கடைசியின் போது பட்டினிகிடக்கிறான். ஆனால், சினிமாவில் ஜெயித்த ஒரு நடிகரோ, டைரக்டரோ, தான் ஃபீல்டுக்கு வந்து பட்டினி கிடந்ததையும் முன்னேறியதையும் சொல்லும்போது, அதற்கு ஒரு அதிகப்படியான முக்கியத்துவம்... அந்தப் பட்டினியின் மீது ஒரு கவர்ச்சியும் ஏற்பட்டுவிடுகிறது. என்றோ அடைந்துவிடுவோம் என்கிற வெற்றிபற்றிய கனவு. அடுத்த வேளை பட்டினியைப் பரவாயில்லை என்று ஏற்றுக்கொள்ளும்படி உன்னைத் தயார்படுத்திவிடுகிறது. இதுதான் சினிமாவின் அபாயகரமான கவர்ச்சி.

இளமையையும் ஆரோக்கியத்தையும் பணயம் வைக்கும் அளவுக்கு இந்தக் கவர்ச்சி உன்னிடத்தில் ஏற்படுத்துகிற பாதிப்பு என்னை வருத்தமடையச் செய்கிறது. ஆயிரக்கணக்கில் வந்து இங்கே நுழைந்தவர்களில் சிலர் ஜெயித்திருக்கின்றனர். அந்தச் சிலரில் ஓரிருவர் தவிர்க்க முடியாமல் பட்டினிகிடந்து இருக் கிறார்கள். அவர்கள் விதிவிலக்குகள். அவர்களது எண்ணிக்கை மிக மிகக் குறைவு. அவர்கள் அடைந்த வெற்றியின் காரணமும் அடிப்படையும்தான் முக்கியமே தவிர, அவர்கள் பட்ட கஷ்டங்கள் உனக்கான முன் மாதிரியாக இருக்க முடியாது.

என்னை அணுகி வாய்ப்புக் கேட்ட பல இளைஞர்களிடத்தில் நான் பார்த்துக் கவலைப்படும் மற்றோர் அம்சம் - அவர்களது தீர்மானம் இன்மை. தாங்கள் என்னவாக ஆக வேண்டும் என்பதுபற்றி அவர்களுக்கே இருக்கிற குழப்பம். அசிஸ்டென்ட் என்று துவங்கி, 'கதை சொல்றேன்... பாட்டு எழுதுறேன்... டயலாக் எழுதுறேன்’ என்று சொல்லிக்கொண்டே போய் கடைசியில், 'ஆபீஸ் பாய்னாக்கூட சரி சார்... எப்படியாச்சும் உள்ளே நுழைஞ்சுட்டாப் போதும்’ என்பார்கள். எனக்கு மனசு கஷ்டப்படும். உங்கள் திறமை, உங்கள் தகுதிபற்றி உங்களுக்கே ஒரு தீர்மானமும் நம்பிக்கையும் வேண்டாமா? உங்களை நீங்களே குறைத்துக்கொள்ள வேண்டுமா? அப்படி என்ன அவசியம் சினிமாவுக்கு?

சினிமாவுக்கு வருகிற உன் போன்றவர்களின் ஊக்கத்தைக் குறைப்பதோ, உறுதியைக் குலைப்பதோ எனது எண்ணம் இல்லை. நிறையப் பேர் வர வேண்டும். உங்களது வருகையும் இருப்பும் உங்களது முழுப் பரிமாணத்தை யும் காட்ட வேண்டும் என்பதுதான் எனது ஆசை. ஆனால், திட்டமோ, கவனமோ இல்லாமல் இங்கு வந்து, தயக்கமும் பயமுமாக நீங்கள் ஒவ்வொருவரையும் அணுகி வாய்ப்புக் கேட்பது எனக்குச் சங்கடம் தருகிறது.

ஒரு மனிதனுக்குக் காதல் என்பது அவசியம். தன் மீதான காதல். நீங்கள் முதலில் உங்களை நேசியுங்கள். உங்கள் உடலை நேசியுங்கள். அதற்கு மரியாதை செய்யுங்கள். ஆரோக்கியமான உடலும் கூர்மையான மனசும்தான் சிறந்த படைப்புகளைத் தர உதவும். ஒரு சின்ன வேலையைத் தேடிக்கொள்ளுங்கள். அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். அடிமனதில், சினிமா ஒரு பொறியாக உங்களுக்குள் கனன்றுகொண்டு இருக்கட்டும். அதை அணையவிடாது, அந்தக் கனலுடன் இருங்கள். அந்தக் கனலின் வீரியம்கூடிக் கொண்டுதான் இருக்கும்.

வயிற்றுப் பசி இல்லாமல் முகத்தில் தெளிவும் - மனம் முழுக்க உங்களது திறமை குறித்த தன்னம்பிக்கையும் - உள்ளே 'என்னால் சாதிக்க முடியும்’ என்கிற உறுதியும்கொண்டு, நீங்கள் ஒருவரிடம் வாய்ப்புக் கேட்பது மிகவும் ஆரோக்கியமான தாக இருக்கும். அப்போது உங்க ளிடம் தேவையற்ற தயக்கம்இருக் காது... கூச்சம் இருக்காது... உறுதி இருக்கும். நம்பிக்கை இருக்கும். எல்லாவற்றுக்கும் மேல் வாய்ப்புக் கிடைக்காவிட்டால், நீங்கள் நிச்சயம் கூசிப்போக மாட்டீர்கள். உங்களுக்குப் பொருந்தி வரக்கூடிய மற்றொருவரைத் தேடி, அதே கம்பீரத்துடனும் தெளிவு டனும் நீங்கள் செல்வீர்கள்.

அன்றாடத் தேவைகளுக்காக ஒரு வேலையில் சேரும்பட்சத்தில் அதிலேயே மூழ்கி நம்முடைய பிரதான லட்சியம் மங்கிப் போகுமோ என்கிற சந்தேகம் இயல்பாகவே வரலாம். ஆனால், அப்படி அவசியம் இல்லை. எல்லாக் கலைகளும் கதைகளும், சுற்றி உள்ள சமூகத்தில் இருந்து தான் உருவாகின்றன. உங்களுக்கான காலம் கனியும் வரை நீங்கள் உங்களைத் தயார் செய்துகொண்டு இருங்கள்.

நீங்கள் என்ன வேலை செய்தாலும், எதில் ஈடுபட்டு இருந்தாலும், உங்களைச் சுற்றி நடக்கிற எல்லாமே கதைகள்தான். சுற்றி இருக்கிற ஒவ்வொருவரும் பாத்திரங்கள்தான். அதைக் கவனிப்பதும் தேர்ந்தெடுப்பதும் மட்டும்தான் உங்கள் காரியம். அதைக் கைக்கொண்டுவிட்டால், அதன் பின் ஒவ்வொரு விநாடியும் நீங்கள் கூர் தீட்டப்பட்டுக்கொண்டு இருக்கிறீர்கள் என்பதுதான் உண்மை. நீங்கள் நடிகனாக விரும்பலாம், டைரக்டர் ஆக விரும்பலாம், கதை - வசனமோ, பாடலோ எழுத விரும்பலாம். எதுவாக ஆக விரும்பினாலும் உங்களுக்கான கச்சாப் பொருட்கள் உங்களைச் சுற்றி நிகழ்கிற சம்பவங்களிலும் உலவுகிற மனிதர்களிடத்திலும் இருக்கின்றன.

தவிர, நிறைய வேற்று மொழிப் படங்களைப் பார்ப்பது உங்களைச் செழுமைப்படுத்தும். நான் பார்த்த ஒரு வேற்று மொழிப் படம் நினைவுக்கு வருகிறது. 'Rape in the Virgin Forest’ எனும் படம். பழங்குடி மக்கள் வாழும் ஒரு காட்டில் 'நாகரிக’ மனிதர்கள் நுழைகிறார்கள். இவர்களது தேவைக்காக விறகு வெட்ட பழங்குடி மக்க ளையே உபயோகிக்கிறார்கள். அந்தப் பழங்குடி பெண்களில் ஒருத்தியை ஒருவன் நதியோரத்தில் கெடுப்பதற்காக விரட்டிச் செல்கிறான். அவள் ஓடுகிறாள். மற்றொரு புறத்தில் இவனுக்கா கப் பழங்குடி ஒருவன் பிரமாண்டமான ஒரு மரத்தை வெட்டிச் சாய்க்கிறான். நெடிதுயர்ந்த அந்த மரம் வீழ்கையில் அந்தப் பெண் ணின் கதறல் பின்னணியாக ஒலிக்கிறது. அப்படியே ஆடிப் போய்விட்டேன். இப்போது நினைத்தாலும் அந்தக் கதறல் மனதில் கேட்கிறது. மரம் விழுவதற்கு அந்தப் பெண்ணின் கதறல் எவ்வளவு பொருத்தமான பின்னணி இசை!

இதுபோன்ற படங்கள் நமக்குள்ளே இருக்கும் திரியைத் தூண்டிவிடுவதுபோல் ஒரு தூண்டலாக இருக்கின்றன.

அன்றாடத் தேவைகளின் முக்கியத்தை உணர்ந்து, அதை நிறைவேற்றியபடியே உனது அடுத்த இலக்குக்காக முயல்வதும்... உன்னை மேலும் மேலும் 'அப்டேட்' செய்துகொண்டு, வாழ்வைக் கவனித்து கவனித்து உனது கலை மனசைக் கூர்மைப்படுத்திக் கொள்வதும்தான் அதிமுக்கிய மாகப்படுகிறது. ஆனால், இவற்றைவிடவும் பெரிதான ஒன்று உண்டு. இந்தப் பாடத்தை எனக்குக் கற்றுத் தந்தவர் எனது மாமா.

ஒருநாள் சாப்பிட்டுக்கொண்டு இருந்தேன். ஒரு சிறு பருக்கை கீழே சிதறிவிட்டது. அவர் புன்னகையோடு சொன்னார், ''இந்தப் பருக்கையோட நிலையைப் பாத்தியா... பாவம்!''

நான் வியப்பாக ''ஏன்?'' என்றேன்.

''இந்தப் பருக்கை எத்தனை இடத்தில் தப்பிச்சிருக்கு. அறுவடையில, களத்து மேட்டுல, அரவை ஆலையில, கடையில, அரிசி களைகையில, சாதம் வடிக்கையில... அப்படின்னு எத்தனை இடங்கள்! எங்கேயும் தவறாம அதோட பயனுக்காக எவ்வளது தூரம் கடந்து வந்துச்சு. இப்பப் பாரு... சாதமா மாறி உன் கைக்கு வந்து, கடைசி நொடியில் தவறி விழுந்துடுச்சே... எவ்வளவு பாவம் அது!''

நான் அதிர்ந்து, அப்படியே சிலையாக நின்றுவிட்டேன். எவ்வளவு எளிமையான மனிதரி டம் இருந்து எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்!

நம்முடைய பிறப்பும் அந்த அரிசிபோலத்தான். நாமும் எத்தனை இடங்களில் இருந்து தப்பித் தப்பி வாழ்வைக் கடந்துகொண்டு இருக்கிறோம். நாம் ஒருபோதும் இந்த அற்புதமான வாழ்வை வீணாக்கிவிடக் கூடாது. கடைசி நிமிடத்தில் தவறிய அந்தப் பருக்கைபோல் தவறிப்போனவர்கள்தான் எத்தனை எத்தனை பேர்!

இதைச் சொல்வதற்கு ஒரு காரணம் உண்டு. மிகப் பெரிய கனவும் உழைப்பும்கொண்டு நீ சினிமாவில் வெல்ல முயலலாம். வெற்றியடைய வாழ்த்துக்கள். ஆனால், அப்படி ஆக முடியாது போனால் அது ஒன்றும் குறைபாடு இல்லை.

சினிமா தவிர்த்தும் வாழ்க்கை மிக உன்னதமானது. பெருமை உடையது. பிரபலம் இல்லாத மனிதனாக வாழ்வது ஒன்றும் குறைச்சலான காரியம் இல்லை.

உன்னை, என்னை உருவாக்கி, இப்போது நாம் இருக்கும் இடத்துக்குக் கொண்டுவந்து சேர்த்திருப்பது வரை, உன் பெற்றோர், என் பெற்றோர் உள்ளிட்ட பல பிரபலமற்றவர்களின் பங்கு இருக்கிறது.

இதுவரை கீழே தவறி விழாத சோற்றுப் பருக்கையாக நீயும் நானும் இப்போது நாம் இருக்கும் இடத்தில் நிற்கிறோம்.

இந்த உதாரணத்தை எனக்கு சொல்லிக் கொடுத்த என் மாமாவும்கூட... பிரபலமாகாத ஓர் எளிய விவசாயிதான்!'

Wednesday, December 14, 2011

கொங்கு நாடு - பொடிநடை பயணம்!

நான் எனது சொந்த ஊரிலிருந்து, கோவை வந்து ஒரு வருடத்திற்கும் மேல் ஆகிறது.என் நகர வாழ்க்கை பற்றி கிராமத்தில் அதிசயமாகப் பேசுவதைப்பார்க்கும் போது சிரிப்பு தான் வருகிறது எனக்கு.

"இக்கரைக்கு,அக்கரை பச்சை" என்பது பழமொழி மட்டுமல்ல, நிஜ மொழியும் தான்.

நேற்றோடு, என் முதல் பணியில் சேர்ந்து ஒரு வருடம் முடிந்து விட்டது.மிக்க மகிழ்ச்சி.கொண்டாட வேண்டுமே என்று நினைத்ததன் விளைவாக, படம் பார்க்கலாம் என முடிவெடுத்தேன்.

பேருந்தில் இருந்து இறங்கி, திரையரங்கு நோக்கி நடக்கத்துவங்கினேன்.

அது ஒரு பிரபல சாலை.எப்போது அதிக கூட்டம் அலைமோதும் இடம்.
போன வாரம் பார்த்தபோது, சுவர்களில் வெற்றிலை எச்சில் கறைகள்,விளம்பர சுவரொட்டிகள்,சாலையோரக்கடைகளின் எச்சில் இலைகள் சகிதமாக காட்சியளித்தது.இன்று பெரிய மாற்றம்.

கூட்டம் மாறவில்லை.சுவர்கள் சுத்தமாக இருக்கின்றது. எப்படி? விடை தெரிந்ததும் சிரிப்பதா? பாராட்டுவதா? என தெரியவில்லை.சுவர்களில் பல்வேறு மதங்களின் சின்னங்களும்,கடவுள் உருவங்களும் பதிக்கப்பட்டிருந்தது.கடவுள் எதைத் தடுக்கிறாரோ இல்லையோ அந்த சுவற்றைப் பாதுகாக்கிறார். நல்ல முயற்சி.

மாலை 6.30 காட்சி நேரம்.மயக்கம் என்ன திரைப்படம்.

விமர்சனம் நிறைய படித்திருப்பீர்கள்.ஆக, கதை பற்றி அதிக விவாதம் தேவையில்லை என் நினைக்கிறேன்.


ஒருவரியில் சொல்லப் போனால், "முயற்சியுடையார்-இகழ்ச்சியடையார்!"
அடுத்த வரியில் சொன்னால், "ஆவதும் பெண்ணாலே! அழிவதும் பெண்ணாலே"- இங்கு முதல் ரகம்.
மூன்றாம் வரியில் சொல்லச் சொன்னால்,"சித்திரமும் கைப்பழக்கம்" - இது கேமராவிற்கும் பொருந்தும்.

படம் முடிந்த பின்னர் வேகமாக வெளியே வந்தேன். இல்லையெனில் வாகனங்களுக்குள் புழுபோல நெளிந்து கொண்டிருக்க வேண்டும் என்பதால்.

எனது கைப்பேசியில், இரண்டு மூன்று தவறிய அழைப்புகள்(தவறவிட்ட அழைப்புகள்). இப்போது பேசும் மனநிலையில் இல்லை.பேருந்து பிடித்து அறைக்கு விரைவாகச் செல்ல வேண்டும்.இப்போதே மணி 9.20யைத் தொட்டு விட்டது.

20 நிமிடப் பயணம். இன்று இரவு எங்கு சாப்பிடலாம் என நினைக்கையில், கண்களில் பட்டது ஒரு உணவகம்.

இன்று அங்கு சாப்பிடுவது தான் சரியாக இருக்கும்.ஏனென்றால், பணியில் சேர்ந்த முதல்நாள், இரவு உணவு அங்கு தான் சாப்பிட்டேன்.தரம் சற்று குறைந்திருந்தது.ஒரு வருடம் ஆகிவிட்டது. எவ்வளவோ மாற்றம்.

நடக்கத் துவங்கினேன்.அந்த வழி நெடுக்க ஏராளமான உணவகங்கள் இருக்கின்றன.கிட்டத்தட்ட அனைத்து கடைகளிலுமே நான் சில நாள் வாடிக்கையாளனாக இருந்திருக்கின்றேன். இப்போதும் அப்படித்தான்.

எங்கள் ஊரில் இருந்த நாட்களில் ஏதாவது ஒருநாள் தான் "ஓட்டல் உணவு".அது பெரும்பாலான நேரம் பரோட்டாவவாகத் தான் இருக்கும்.
ஆக,அப்போதெல்லாம் ஓட்டல் என்றாலே பரோட்டா தான்  கண்முன் வரும்.ஆனால், இங்கு வந்த பிறகு உணவகங்களின் பல வகை உணவுகளைப் பற்றி அறிந்து கொண்டேன்.
  • ஒரு கரண்டி மாவினை அப்படியே ஊற்றி,ரெண்டு திருப்பு திருப்பிக் கொடுத்தால் வீட்டு தோசை.
  • அதே மாவினை, ஊற்றிய பின்னர் கல்லில் பரவவிட்டு எடுத்தால், சாதா தோசை. நல்லா வெந்து மொறுமொறு என இருந்தால் "ஸ்பெஷல் தோசை"
  • இரண்டு கரண்டி மாவினை பெருசா ஊத்தி எடுத்தா ஊத்தாப்பம்.(சில மிகைத் துணைகளை சேர்த்து, வெங்காய ஊத்தாப்பம், தக்காளி  ஊத்தாப்பம், முட்டை ஊத்தாப்பம், என நிறைய இருக்கு)

இது போல முட்டை உணவுகளிலும் பல ரகம்.
  • முட்டையை கல்லில் உடைத்து விட்டு, ஒருபக்கம் வேக விட்டுக் கொடுத்தால் ,ஆஃபாயில்.
  • அதை இரண்டு புறமும் வேக வைத்தால் ஃபுல்பாயில்.
  • வெங்காயம்,கொத்தமல்லி சேர்த்து கொஞ்சம் வேக விட்டால், ஆம்லெட்.
  • அதே வெங்காயத்துடன்,முட்டையை ஒரு பக்கம் வேக விட்டு, மடித்துக் கொடுத்தால் அது கலக்கி.
இப்போது எனது சிறுவயது சிறப்பு உணவு - பரோட்டா.
  • சில்லி பரோட்டா
  • வீச்சு பரோட்டா
  • முட்டை வீச்சு பரோட்டா
  • முட்டை பரோட்டா
  • கொத்து பரோட்டா
இது போல நிறைய இருக்கின்றன.எல்லாமே நான் சுவை பார்த்து விட்டேன்.

வெளி உணவுகள் உடலுக்கு நல்லதில்லை தான்.வேறு வழியில்லை. சமைக்கும் வசதி அறையில் இல்லை என்பதால் பொறுத்துக்கொள்ள வேண்டி இருக்கிறது.

வீட்டை விட்டு வெளியே வந்து, காசுக்காக உழைத்து வாழ்கின்ற பல இளைஞர்களுக்கு,இது போன்ற சிறு உணவகங்கள் தான் உறவினர்கள் வீடு போல.காசு கொடுக்கிறோம் அது மட்டும் வேறுபாடு.

எனது அறைக்கு வெகு அருகில் பெட்டிக்கடை ஒன்று இருக்கிறது.
பல பன்னாட்டு நிறுவனங்கள் அருகில் இருப்பதால் இரவில், சிகரெட் வியாபாரம் அங்கு ஜோர்.

சற்று தள்ளி ஒரு ஜோடி நின்று கொண்டிருத்தது.பெண்ணிற்கு சம உரிமை கொடுக்கிறான், புகைக்கையில். இருவரின் இழுப்பில், சாம்பலாய் இறக்கிறது அந்த சிகரெட்.

கலாச்சார சீர்கேடு இது தானோ!! அதிர்ச்சி தெளியாமலே அறையை அடைந்தேன்.


எப்போது உறங்கினேன்? தெரியவில்லை..

திரைகடல் ஓடியும், கலாச்சாரத்தைக் கெடுக்காத,உறவுகளைப் பிரிக்காத திரவியம் தேடு!!

Wednesday, October 12, 2011

வாகை சூட வா!!




முக்கிய நடிகர்கள் :
விமல்,இனியா,பாக்கியராஜ்,பொன்வண்ணன்
கதைச்சுருக்கம்:
1966ஆம் ஆண்டு:

எங்க வீட்டுப்பிள்ளை படத்தில், எம்.ஜி.ஆர் அவர்கள் நம்பியாரிடம் சவுக்கடி வாங்கும் காட்சியை திரையரங்கில் பார்க்கும் ஒரு நரிக்குறவன் கோபமடைந்து,நம்பியாரை துப்பாக்கியால் சுடும் காட்சியுடன் அமர்க்களமாக துவங்குகிறது படம்.

சர்க்கார் உத்தியோகம் தான் சமுதாயத்தில் மதிப்பையும், சொந்தத்தில் ஒரு மரியாதையையும் கொடுக்கும்.ஆக தன்னால் முடியவில்லை என்பதால்  மகனையாவது அரசாங்க வேளையில் அமர்த்த வேண்டும் என்ற குறிக்கோள் கொண்ட சராசரி அப்பாவாக இறுதிவரை வலம் வரும் பாக்கியராஜ் முருங்கைக் காயுடன் அறிமுகமாகிறார்..

விமல் படிப்பை முடித்து ஆசிரியர் வேலைக்கு சேர விழையும் நடுத்தர குடும்பத்து இளைஞன்.தந்தையின் விருப்பப்படி,கிராம சபா அமைப்பு அளிக்கும் சம்பளம் மற்றும் சான்றிதழுக்காக  "கண்டேடுத்தான்காடு" என்ற கிராமத்துக்கு,வாத்தியாராக செல்கிறான் நமது கதாநாயகன்."செங்கல் சூலைக்காரா" என்ற பாடலுடன் கிராமம் நமக்கு அறிமுகமாகிறது.

செங்கல் சூளையில் கல் அறுக்கும் குழந்தைகளுக்கு கல்வி புகட்ட விமல் படும் பாடு,தேநீர்கடை வைத்திருக்கும் பெண்ணாக வரும் கதாநாயகி இனியா, தனது காதலை வாத்தியாருக்கு புரியவைக்க எடுக்கும் முயற்சிகள்,மக்களை அடிமையாக நினைக்கும் பொன்வண்ணனுக்கு ஊர்மக்கள் கொடுக்கும் பதிலடி ஆகியவற்றை மையமாக வைத்து கதை நகர்கிறது. 

விமல் குழந்தைகளுக்கு கல்வி புகட்ட எடுக்கும் முயற்சிகள் வெற்றியடைந்ததா?இனியாவின் காதல் கைகூடியதா ? விமலுக்கு சர்க்கார் உத்தியோகம் கிடைத்ததா? அன்றாட உணவுக்கு படியளக்கும் பொன்வண்ணனை பகைத்த ஊர்மக்களின் நிலை என்ன? என்பதற்கு பதில் தான் மீதி கதை.

அருமை:
காட்சியமைப்பு
கதையோடு தொடர்புடைய பாடல் வரிகள்
யதார்த்தமான வசனங்கள்
இனியாவின் இயல்பான நடிப்பு
கதை முழுக்க நம்முடன் உறவாடும் ஊர்மக்கள்
குழந்தை நட்சித்திரங்கள்
.
இயக்குனருக்கு:
நல்ல முயற்சி. பாராட்டுக்கள்.
மின்சாரம் ,தொலைகாட்சி இல்லாத அந்தக் கால மக்கள் வாழ்க்கையையும் , இளமைக்கல்வியின் மகத்துவத்தையும் உணர வைத்த மனதைத் தொடும் திரைப்படத்தை கொடுத்ததற்கு நன்றிகள்.