Friday, January 25, 2013

கூடு திரும்பிய குருவி! (சிறுகதை)


கடை வீதிகள். 
இந்த உலகில் தவிர்க்க முடியாத பிரசித்தி பெற்ற இடங்கள் இவைதான்.ஒரு நகரத்திற்கு பயணம் மேற்கொள்கிறோம் எனில்,அங்கே அமைந்துள்ள பலவகைக் கடைகளைப் பார்வையிட நாம் கண்டிப்பாக நேரம் ஒதுக்குவோம்.இன்று நேற்றல்ல.நம் தமிழகத்தில் இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்னர் இருந்தே "அங்காடித் தெரு - விற்பனை சந்தை" போன்றவை இருந்து வருகின்றன. 

கோவை மாநகருக்கு நான் வந்து மூன்றாண்டுகள் ஆகின்றன.உடைகள் விற்பனை,உயர்ரக அணிகலன் விற்பனை என பலநூறு ஆண்டுகள் சிறப்புபெற்ற கொங்கு மண்டல தலைநகரல்லவா அது. இன்றும் அப்படியே விளங்குகிறது.100அடி ரோடு,க்ராஸ்-கட் ரோடு என் நகரின் மையப்பகுதியில் இரு பெறும் சாலைகள்.இவற்றின் இருமருங்கிலும் வானுயர் கட்டிடங்களும்,அவற்றின் ஒவ்வொரு மாடிகளிலும் ஒவ்வொரு வகைக் கடைகளும் காணக்கிடைக்கின்றன.குறிப்பாக வீட்டு உபயோகப்பொருட்கள்,மின் சாதன விற்பனைக்கடைகள்,கணிப்பொறி,கையடக்க தொலைபேசி மற்றும் அவைசார்ந்த விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள்,சில சிற்றுண்டிக் கடைகள்,பெரிய அசைவ உணவகங்கள்,என விரிகிறது பட்டியல்.இவ்வளவு பெரிய நகரத்தில்,தங்களுக்கென பல வாடிக்கையாளரை ஒவ்வொரு கடைகளும் கொண்டிருப்பது ஆச்சரியமாகத்தான் தெரிகிறது.
இப்போது கதையின் நாயகனை அறிமுகப்படுத்தும் நேரம்.பெயர் முருகன்.எனக்கு தூரத்து உறவு என்று வைத்துக் கொள்ளலாம்.முருகனுக்கு சொந்த ஊர் ஈரோடு மாவட்டம்,கோபிசெட்டிபாளையம் வட்டம்,அத்தாணி என்ற அழகிய ஊர்.அங்கே தேங்காய்,வாழைஇழை,காய்கறி என நேரத்துக்கு ஏற்றார்ப்போல வியாபாரம் செய்து வந்தார் அவர்.பல தமிழ்ப்படங்களில் காட்டுவது போல,ஒரு நகரத்துக்குச் சென்று,சம்பாதித்து பின் தன் கிராமத்திற்கு காரில் வந்து இறங்கும் ஆசை முருகனுக்கு என்றுமே உண்டு.பகல் நேரங்களில் வீட்டுத்திண்ணையில் படுத்தபடி இந்த நினைவை அடிக்கடி அவர் அசைபோடுவது வழக்கம்.அந்த அதிர்ஷ்டக் கனவை, சோதித்துப்பார்க்கும் நாள் வந்தது. 

அதிகாலையில்,அந்தியூர்-கோபி வழியாக கோவை செல்லும் பேருந்தைப் பிடித்தார்.2000 ரூபாய் வழிச்செலவுக்கென எடுத்துக்கொண்டார்.
கோவை பேருந்துநிலையத்தை அடைந்தபோது மணி 9 ஆகிவிட்டது.பேருந்திலிருந்து இறங்கும்போது அருணாச்சலம் படத்தில் சென்னையில் இறங்கும் ரஜினியை கண்கள் மூடி நினைத்துக் கொண்டார். 

பேருந்து நிலையத்திலிருந்து சிறிது தூரம் வேடிக்கை பார்த்தபடி நடந்தார்.அங்கு இன்னும் சில சிற்றுண்டிக் கடைகளை அவர் பார்க்க நேர்ந்தது.ஒன்றிரண்டு பேர் மட்டுமே வந்துபோய்க் கொண்டிருந்த ஒரு  கடையில்,கல்லாப்பெட்டியில் இருந்த சில்லறையை எண்ணியபடி சோகமாய் முதலாளி கண்ணில் பட்டார்.வெளியில் அவருடைய பழைய மோட்டார்வண்டி பரிதாபமாய்க் காட்சியளித்தது.இதை பார்த்ததும் சற்றே அதிந்துபோனார் முருகன்.ஏனெனில்,உணவகம் ஆரம்பிக்கலாம் என்ற ஒரு எண்ணம் அவருக்கு இருந்தது.இதுபோல நமக்கும் நேர்ந்தால் என்ன செய்வது என தன்னையே ஒருமுறை கேட்டுக்கொண்டார். 

இதே சிந்தனையில் நடந்தவர் சாலையோரம் இருந்த ஓர் தேநீர்க்கடையில் வந்து அமர்ந்தார்.வாகன நெரிசலில் சிக்கி உழன்ற புகை,புழுதி அனைத்தும் அந்தக் கடை வாசல் வரை வந்து அங்கேயே சுற்றிக்கொண்டிருந்தன.வாகன இரைச்சலும் நகர நெரிசலும் மிகுந்ததாக இருந்தது அந்த சாலையில்."என்ன சாபிடுரீங்க சார்?" எனக் கேட்ட அந்தப் பெரியவரிடம் "ஒரு டீ" எனச் சொன்னார் முருகன்."பஜ்ஜி போண்டா தரட்டுமா சார்? சூடா இருக்கு!" எனச் சொன்னவரிடம் வெறுமனே வேண்டாம் என தலையசைத்தார்.மீண்டும் சிந்தனையில் மூழ்கினார்.'இந்த தேநீர்க்கடையில் வேலை செய்யும் இந்த முதியவரிடம் கூட கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது.வேண்டுமா எனக்  கேட்காமல்,தரட்டுமா என்று நேர்மறையாய் வினவுகிறார்.வேண்டாம் என்று சொல்லவே எனக்கு நா எழவில்லையே?ஒரு வியாபாரத்தில் இப்படியான நேர்மறை எண்ணங்கள் மிக முக்கியம் தான்!' என தனக்குத் தானே மனதுக்குள் சொல்லிக்கொண்டார்.

லேசாகத் ஆரம்பித்த வெயில், இப்போது சுட்டெரிக்கத் துவங்கியது.வியர்வை வழிய 100 அடி சாலையில் நடகத்துவங்கினார்.ஒவ்வொரு கடையின் மேல்புறமும் வைக்கப்பட்டிருக்கும் பெயர்ப்பலகையை வியப்பாகப் பார்த்தார்.ஒரேபொருளை விற்கும் பல கடைகள்.அவற்றின் விளம்பரமும்,பெயர்ப்பலகையும் எவ்வளவு வித்தியாசப்படுகின்றன.வியாபார தனித்துவம் மிக முக்கியம்.இல்லை என்றால் இந்த பெரிய நகரத்தில்,இவ்வளவு போட்டியை சமாளித்து வியாபாரம் செய்ய முடியுமா?சில கைப்பேசி விற்பனைக் கடைகள்,மிகப்பெரிய பல்பொருள் அங்காடிகள்,தொலைக்காட்சி விளம்பரங்களில் கண்ட துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகள் என சுற்றிக்கொண்டிருந்த அவருக்கு, தான் வசிக்கும் கிராமம் நினைவில் வந்தது. 

அந்த ஊரில் இருக்கும் மளிகைக் கடைகளில் ஒன்று முத்து அண்ணன் கடை.மளிகைப் பொருட்கள்,காய்கறிகள் மற்றும் தேநீர் என 40 வருடங்களுக்கு மேலாக வியாபாரம் நடந்து கொண்டிருக்கிறது.இத்தனைக்கும் பெயர்ப்பலகைகூட அங்கே வைத்திருக்கப் படவில்லை.அவருடைய ஒரு மகன் மருத்துவம் படித்து சென்னையில் பெரிய மருத்துவமனை ஒன்றில் வேலை பார்க்கிறான்.மகளுக்கு போன மாதம் திருமணம் முடிந்தது.மகனுக்கு வரன் பார்த்துக்கொண்டிருக்கிறார்.அவர் எல்லாம் இந்த நகரத்தைப் பார்த்தது கூட கிடையாது.ஆனாலும் அவர் தன் தொழிலை சிறப்பாக செய்து,உயர்ந்திருக்கிறார்.

அவரை நினைத்துப் பெருமைப்பட்டுக் கொண்டார் முருகன்,.சாலையோர நடைபாதைக்கடை ஒன்று அவர் கண்ணில் பட்டது.காலை உணவு முடித்து நீண்டநேரம் ஆகியிருக்கவே,அங்கே சென்று சாபிடலாம் என எண்ணினார்.
அந்தக்கடையைச்சுற்றிலும் சிலர் நின்று சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.அவர்களில் பெரும்பாலானோர் வேலை தேடி சுற்றும் இளைஞர்கள்.அவர்களைப் பார்த்தபடி கடையை நெருங்கினார்.அங்கே தொங்கிக்கொண்டிருந்த உணவு வகைகள் அட்டையைப் பார்த்தபடி,"ஒரு தக்காளி சாதம் குடுங்க!" என்று முருகன் கேட்டார்.கடைக்காரர் திரும்பி தன் மனைவியிடம் உத்தரவு போட்டார், "ஒரு தக்காள் சாதம் - லைனுக்கு!".வேகாத வெயிலில் நின்று கொண்டு வியாபாரம் செய்யும் இவர்களுக்கு நல்ல பலன் கிடைக்க வேண்டும் என சாப்பிட்டபடி மனதுக்குள் வேண்டிக்கொண்டார்.தன்னையே பார்த்தபடி நிற்கும் முருகனிடம் அந்த ஆள் பேசத்துவங்கினான்,"சாப்பாடு எப்படி சார்
இருக்கு?".முருகனிடம் இருந்து சட்டென பதில் வந்தது,"அருமை..!"."நல்லது சார்.இன்னைக்குதான் இந்த ஏரியாவுக்கு வரோம்.இதுக்கு முன்னே கணபதி பாலத்துகிட்ட கடை வச்சிருந்தோம்!அங்க வியாபாரம் ஒன்னும் சரியில்ல.அதான் இங்க வந்துட்டோம்!" என மூச்சு விடாமல் சொல்லி முடித்தான் அந்த ஆள்."வியாபாரம் எப்படிப் போகுது.உங்க வீடு எங்கே இருக்கு?" என முருகன் கேட்டார்.இதைக் கேட்ட உடனே அந்த ஆள் முகத்தில் மாறுதல் கண்டது.ஏதோ ஒரு பெரிய சோகக்கதையின் வெளிப்பாட்டுக்கு முன்னுரை போட்டுவிட்டோமோ என்றே முருகனுக்குத் தோன்றியது.
"சொல்லிக்கொள்ளும் படி பெரிய லாபமெல்லாம் கிடையாது சார்.இன்னைக்கு சம்பாதிக்கிறது நாளை சமைக்கவே சரியா இருக்கும்.மிச்சமாகும் காசு வீட்டு வாடகைக்கு சேர்ந்துவைக்க போதுமானதாக இருக்கும்.நாங்க ரெண்டு
பேருதான்.நல்லவேளை ஆண்டவன் எங்களுக்கு பிள்ளைவரம் கொடுக்கல.அப்படி ஒன்னு பொறந்திருந்தா,ஒரு சுகமும் அது கண்டிருக்காது!" என நீர்கோர்த்தவிழியுடன் சொல்லிக்கொண்டிருக்க,அவர் மனைவி அழுதே விட்டாள்.அந்த ஆள் மீண்டும் பேசத்துவங்கினான்,"வீடு கணபதில தான் இருக்கு.800 ரூபா வாடகை.அதைக் கொடுக்கறதுக்கே கஷ்டமாயிடுது.இதுல,உடம்புக்கு ஏதாவது அசௌகிரியம் வந்தா இன்னும் சிரமம் சார்.எப்படியோ சாகாம வாழுறோம்.இன்னும்
எத்தனை வருஷம் இப்படியே இருக்கப்போறோம்னு தெரியல!".
  இப்போது முருகன் கோவையிலிருந்து தன் சொந்த ஊர் செல்லும் பேருந்தில் பயணத்துக்கொண்டிருக்கிறார்.ஊருக்குச் சென்று,தான் செய்யும் தொழிலை கவனமாக,சிரத்தையோடு செய்யவேண்டும்,தன்னைக் கஷ்டம் தெரியாமல் வளத்த பெற்றோர் காலில்விழுந்து கும்பிடவேண்டும்,தொழிலில் வெற்றி பெற்ற பலரிடம் சென்று ஆலோசனை பெற வேண்டும் என ஏராளமான திட்டங்கள் அவர் மனதுக்குள் உருவாகிக்கொண்டிருந்தன.அவர் கண்டிப்பாக முன்னேறிவிடுவார். நான் சொல்லவில்லை.அந்த ஊரில் அப்படிப் பேசிக்கொள்கிறார்கள்.

 - ராஜ்குமார்

Wednesday, January 23, 2013

இதயத்திருடி...


நினைக்கவே கூடாது என்று தான் நினைக்கின்றேன்.
 கண்களை விட்டு மறைய மறுக்கிறது அவள் முகம்!
கனவில் நினைப்பவர்கள் கண்முன் வருவார்களா?
அன்று நான் கண்டேன்!
வெள்ளை உடையில் தேவதையாய்!

கனவிலும் அவள்!நினைவிலும் அவள். சிலநாள் சுற்றி நடப்பவை அறியும் உணர்வில்லை எனக்கு!
என்ன ஆயிற்று ?
"காரணம் அவள் தான்.மறந்து விடு" -உள் மனம் கிசுகிசுத்தது..
அதோ சந்தர்ப்பங்கள் வருகின்றன, 'சண்டாளி' இவளென மறந்து தொலைக்க...

அதிகாலை நேரம்.
ஜோடியாய் அவள் இன்னொருவனுடன் மோட்டார்வண்டியில்.
படு வேகமாய்...மிக நெருக்கமாய்...
மனமுடைந்து,உணர்விழந்து பார்த்துக்கொண்டிருந்தேன்.


என்னவள் இல்லை இவள் !

சிலரை பிடிப்பதில்லை நமக்கு.
நமக்கு சொந்தமான ஒன்று அவர்களிடம் இருக்க,
நினைவுகளை நம்மால் தொலைக்க முடிவதில்லை.
அவள் எதை எடுத்துக்கொண்டாள் என்னிடமிருந்து?.
ஏன் மறக்க முடியவில்லை அவளை?

இன்று காலை.
அதே சாலை.ஆட்கள் கடந்தபடி இரைச்சலாய்.
பச்சை உடையில் அந்த பாரிஜாதம்! அதோ வருகிறாள்.
அவள் நடைக்கு ஜதி சொல்லின என் இதயத்துடிப்புகள் !
நெருங்கி வருகிறாள்."நீ பறிகொடுத்த இதயம் திரும்ப வேண்டுமா?!"
கேட்டபடி கடக்கின்றன அவள் ஒற்றைப் பார்வையும்,
உதட்டோரப் புன்னகையும்!

- ராஜ்குமார்

Monday, January 21, 2013

ஒரு உதாரணம் - கற்பனைக் கதை - ராஜ்குமார்

ஒரு குழந்தை.ஆணோ பெண்ணோ!பிறந்துவிட்டது.

5 வயது முடிந்த பிறகு அரசுப்பள்ளியில் சேர்க்கலாம் என நினைத்தால்,துணைவி பக்கத்து வீட்டு வாட்ச்மேன் பையன் 2 வயதில்,கான்வென்ட் போவதை மறைமுகமாய் சொல்லிக்காட்டுகிறாள்.

அப்படியே நாமும் குழந்தையை அந்தப்பள்ளியில் சேர்க்கலாம் என சொன்னால்,மறுபடியும் ஒரு பிரச்சினை.

வாட்ச்மேன் குழந்தை படிக்கும் பள்ளியிலேயே இஞ்சினியர் பிள்ளையும் படிப்பதா? கௌரவம் என்ன ஆவது? ஊரே கேவலமாய்ப் பேசும் என்று எச்சரிக்கை வேறு.

அப்படியா.சரி.உயர்ந்த பள்ளி என நீங்கள் சொல்வது எது எனக் கேட்டால்,இந்தப் பள்ளியைவிட சில மடங்கு அதிக கட்டணம் கேட்கும் பள்ளியைக் காட்டுகிறார்கள்.

அவர்கள் கேட்ட அந்தத் தொகையை 23 வயதில் கல்லூரிக்கு செலுத்தியதாக நியாபகம்! 

சொந்தக்காரர்களின் முகங்கள் கூட சரியாகப் பழகாத அந்த 2 வயது பிஞ்சை,அந்தப் பள்ளியில் சேர்த்தாயிற்று.

முதல்நாள் நானே பைக்கில் கொண்டு விட்டேன்.அழுதகண்களோடு கையசைத்துவிட்டு, பள்ளிக்குள் நுழைந்தது குழந்தை.

அடுத்த ஒருவாரம் பள்ளி வாகனம் வீட்டுக்கே வந்து அழைத்துச் சென்றது.

ஒரு ஞாயிறு இரவு.கணிப்பொறியில் ஒலித்துக்கொண்டிருக்கும் பாடலில் மூழ்கியிருந்தேன்.என்னவள் வந்தாள்."குழந்தை அழுகிறது.என்னவெனக் கேளும்!" என்றாள்.


 மடியில் அமர்த்தியபடி குழந்தையைக் கேட்டேன்,"என்ன ஆயிற்று".
பள்ளிக்கு தினமும் காரில் கூட்டிச் செல்லவேண்டும் என்றும்,தன் வகுப்பில் அனைவரும் அப்படியே வருகிறார்கள் என்றும் கூறியது.அ,ஆ கூட படித்துப்பழகாத இந்த பிஞ்சின் மனதுக்குள் ஏற்றத்தாழ்வு பூதம் நுழையப்பார்க்கிறதே என பயந்தேன்.அப்படியே காரில் இறக்கிவிடுவதை வாடிக்கையாக்கினேன்.



சிலநாள் கழித்து மீண்டும் அழுகை.என்னவெனக்கேட்டேன்.

தன் வகுப்புப் பையன் ஒருவனுக்கு,அவன் தந்தை அமெரிக்காவிலிருந்து கண்சிமிட்டும் பொம்மை வாங்கிவந்தார் என்றும்,அதே போல தனக்கும் வேண்டும் என்றது. 
அதட்டினேன்.அழுதது. 

அடிக்க மனம் வரவில்லை.பெரிய கடை ஒன்றுக்கு அழைத்துப்போய்,சில ஆயிரங்கள் செலவு செய்து வேண்டிய பொம்மைகளை வாங்கிகொடுத்தேன்.

இதுதான் நேரம் என்று துணையும் நகை வேண்டும் என்றது.நாளை அவள் தோழியின் திருமணவிழாவாம்.பெரிய இடம்.நாமும் அதற்கேற்ப போகவேண்டும் அல்லவா?என கேள்வி வேறு.

நாட்கள் நகர்ந்தன.

குழந்தை மதிப்பெண்பட்டியலைக் கொண்டுவந்து காட்டியது.தேர்வுகள் அனைத்திலும் 95,100 என மதிப்பெண்கள்.பேச்சில் ஆங்கில வார்த்தைகள் சற்று தூக்கலாகவே இருந்தது.மனைவிக்கு இதில் ஏக பெருமை.

என் குழந்தைக்கு தமிழில் நாட்டம் குறைந்துவிட்டதோ? என எண்ணம் எழுந்தது.
ஒரு சில வார்த்தைகளைக் காட்டி படிக்கச் சொன்னேன்."I dono dad" என சொல்லிவிட்டு ஒரு ஆங்கிலப் பாடலை முனுமுனுத்தபடி ஓடியது குழந்தை.

மனைவி,”உங்களைப்போலவே அவனையும் தமிழ் பித்தன் ஆகச்செய்கிறீரா?” என கிண்டலாகக் கூறிக் கடந்தாள்.


அரசுப்பள்ளியில்,10 வயதில், "தமிழ் என் மூச்சு! தமிழின் வளர்ச்சிக்கும்,தமிழின் செம்மைக்கும் உயிருள்ளவரை துணைநிற்பேன்!" என மேடையில் முழங்கிய என் உருவம், ஏளனமாய்ச் சிரித்தது என்னைப்பார்த்து!

Tuesday, January 1, 2013

ஆங்கிலப் புத்தாண்டை கொண்டாடியே ஆக வேண்டுமா?

இந்தக் கேள்விக்கான விடையை ஒரு வார்த்தையில் சொல்ல முடியாது.கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம்.
(இது முழுக்க முழுக்க என் தனிப்பட்ட கருத்து- ராஜ்குமார்)

தமிழன் என்பவன் எப்படிப்பட்டவனாக இருந்தான் ? இருக்கவேண்டும்?
நம்மைப்போன்றா எனக் கேட்டால் இல்லை என்றுதான் சொல்வேன்.

அன்றைய தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளைப் படித்துப்பாருங்கள்.அவர்களின் மேன்மை தெரியும்.அவர்கள் பிற நாட்டு கலாச்சாரங்களை பிற நாட்டு மக்களை அனுசரித்து வாழ்ந்தார்கள்.அதைவிட தமிழ்பண்பாட்டை உயிருக்குமதிகமாக மதித்து வாழ்ந்தார்கள்.

இன்று மற்ற பண்பாடுகளின் மீதான அந்த மதிப்பு, மோகமாய் மாறிவிட்டது.தமிழ்பண்பாடு தெருக்குப்பையாகத் தெரிகிறது நம்மவர்க்கு.




ஆங்கிலப்புத்தாண்டு பிறப்பை விடிய விடிய விழித்திருந்து கொண்டாடுகிறார்கள் .தமிழ்புத்தாண்டு என்பது அவர்களுக்கு ஞாயிறுபோல ஒரு விடுமுறைநாள்.அவ்வளவுதான்.எத்தனை பேர் இன்றைய தமிழ் தேதி மற்றும் மாதத்தை தெரிந்து வைத்திருக்கிறோம் ? இதுபோல நம்மைத் தமிழன் என்று உணர வைக்கும் பலவற்றை நாம் ஒதுக்கிவிட்டோம்.மேற்சொன்னவை வெகுசிலவே.

என்னுடன் பணியாற்றும் மென்பொருள் பொறியாளர்களில் பலர் சொல்லி நான் வருத்தப்பட்ட ஒரு செய்தி,அவர்கள் ஒரு வார்த்தையாவது தமிழில் எழுதிப்பார்த்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன என்பதுதான்.இதை என்னவெனச் சொல்வது?யாரிடம் சென்று முறையிடுவது?அவ்வளவு நமக்கு ஆங்கிலம் பெரிதாகப் போய்விட்டதா?தன்னை வளர்த்த தாயைவிட பணம் கொடுக்கும் முதலாளி உயர்ந்தவானாகி விடுவானா?ஒரு மணித்துளியாவது இதனை நாம்  எண்ணிப்பார்க்கவேண்டும்.

தமிழ்மொழி நமக்கு தாய்மொழி .  இன்று வரை அப்படித்தான் இருக்கிறது.இனியும் இப்படியே இருக்கவேண்டும் என நினைத்தால், இனி தமிழர்களாகிய நாம்தான் தமிழுக்குத் தாய்   என நினைத்துக்கொள்வோம்.தமிழ் என்ற நம் குழந்தை எங்காவது வதைபட்டால்,தலைகுனிய நேர்ந்தால் தாங்கும் தோள்களாக ,தட்டிக்கொடுக்கும் கரங்களாக நாம் இனி இருப்போம்.இன்று இந்த உறுதியை,தமிழராகிய அனைவரும் எடுப்போம்!

ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பைக் கொண்டாடுங்கள் - நாம் தமிழர்கள் என்ற எண்ணத்தை மனதில் நிறுத்திக்கொண்டு.