Thursday, December 29, 2011

சார்...ஒரு உதவி ! நன்றி சொல்லனும்!

"உன்னை நான் பார்த்ததும் இல்லை,
என்னை நீ பார்க்கவும் இல்லை,பின்பு
எதற்காகத் துடிக்கிறாய்-நான் வாழவேண்டும் என்று ?"

என்ன கைமாறு செய்வதெனத் தெரியாமல் ஒரு கவிஞன், தன் இதயத்தைப் பார்த்து தொடுத்த வினா இது.

நானும் நினைத்துப் பார்க்கிறேன்.எனக்கு உதவியவர்களை.
சில பேர் கண்முன் வருகிறார்கள்.நன்றிக்கடன் செலுத்த நினைத்த என்னிடம் .இதையெல்லாம் பெரிதாக்காதே! நமக்குள்ள என்ன கைமாறுகள்?" என பூரித்து கண்ணீர் சிந்தியவர்கள் பலர்.நன்றி வேண்டாம்,கடன் மட்டும் போதும் என
வாங்கி மறைந்தார்கள் சிலர்.

ஆனாலும் கொஞ்சம் ஆழமாக எண்ணிப் பார்க்கும்போது, நமக்கு உதவியவர்கள் பட்டியல் நீள்கிறது.பயணச்சீட்டு வாங்கிக் கொடுத்தவர்,அடுத்த தெரு வரை சென்று வண்டியில் இறக்கி விட்டவர்,அடிபட்டுக் கிடந்தபோது அவசரமாய் மருத்துவமனையில் சேர்த்தவர்,அவசரமாய் தொலைபேசி எண் எழுத பேனா கொடுத்தவர்,வங்கியில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உதவியவர்...இன்னும் எத்தனையோ பேர்.

அறிமுகம் இல்லாத இவர்களுக்கு நான் என்ன செய்யப் போகிறேன்?
மீண்டும் என் வாழ்வில் இவர்களை சந்திப்பேனா? தெரியாது. ஆனால் உதவிகள் பெரிது தான்.

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமு மாற்ற லரிது (101)

உண்மை தான்.ஒன்று மட்டும் என்னால் முடியும்.
உதவி என்றால், தெரிந்தவர்க்கு, உறவுகளுக்கு மட்டுமே செய்தல் என்ற மாய எண்ணத்தை முதலில் விலக்க வேண்டும்.
இந்த உதவிகளை அறிமுகம் இல்லாத மற்றவருக்கு செய்ய வேண்டும்.

இதனால் உங்களுக்கு சொல்லும் செய்தி யாதெனில்,

"மற்றவர் செய்த உதவிகளை சற்றே நினைத்துப் பார்க்கும் ஒருவன்,
சுயநலம்,பொறாமை,கர்வம் போன்ற சிறு சிறு உணர்வுகளுக்கு அடிமையாக மாட்டான்"

"பேசறவன் ஆயிரம் பேர் எனில் ,செய்பவன் ஆறு பேர்தான்" நாம் எந்தப் பக்கம்? முடிவு உங்கள் கையில்.


Friday, December 23, 2011

"வெடி" வெள்ளி


இன்றைய பதிவினை ஒரு அறிவுரையுடன் ஆரம்பிக்கலாம்.

"காதல் திருமணம் செய்யுங்கள்
ஆனால் பெற்றோறை எதிர்த்து திருமணம் செய்யாதீர்கள்......
செய்தால் அது காதல் திருமணம் அல்ல.
ஏனெனில்,
இன்றுவரை காதலித்த பெற்றோரின் உண்மைக்காதல் புரியாத
உங்களுக்கு உங்கள் காதல்
புரிந்திருக்க வாய்ப்பில்லை!
"

இந்த சின்ன அறிவுரை புரியாமல் பலர் பலரை, கண்ணீரில் மிதக்கவிட்டிருக்கிறார்கள்! இனியும்
வேண்டாமே!

சரி. நான் சொல்ல வந்ததே வேறு.
இந்த வாரம் தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் பரபரப்பான வாரம்.

சோ மற்றும் உளவுப்படையின்
உதவியால், பல உண்மைத்தகவல்கள் வெளிவந்ததால், "சினேகிதியே" என்று முதல்வரைப் புகழ்ந்த உயிர் தோழி,
"ஒய் திஸ்  கொலவெறி டி" எனப் பாடும் அளவுக்கு அதிரடியாக விரட்டப்பட்டார். அடுத்த முதல்வர் கணிப்பு,
அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது என தினம் தினம் அடுக்கடுக்காக காரணங்கள் குவிகின்றன.இது எங்கு முடியும் என
இந்த வருட முடிவுக்குள் தெரியவரும்.



நன்றாக இருக்கின்ற முல்லைப் பெரியாறு அணையை உடைக்க வேண்டும் எனக் கொக்கரிக்கும் கேரள அரசினை, தமிழ் புலிகள் மிரள வைத்துக்
கொண்டிருக்கின்றன.மத்திய அரசின் தலையீடு இதுவரை இல்லை என்பதால், இது பெரும் வன்முறையாக வெடித்துவிடுமோ என்ற அச்சம் இருக்கிறது.விரைவாக எதாவது ஒரு முடிவுக்கு வர வேண்டும். பார்க்கலாம்.

அதை எல்லாம் விட, முக்கிய செய்தி.



அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்! கொண்டாடி மகிழுங்கள்!! அடுத்தவாரம் சந்திப்போம்!

(நான் சொந்த ஊர் செல்ல இருப்பதால் நேரம் கருதி, இந்தச் செய்தி இத்தோடு முடிகிறது)


Friday, December 16, 2011

சொல்லக்கூடாத ரகசியங்கள்

இன்று காலையில் என் நண்பனிடமிருந்து வந்த குறுஞ்செய்தியுடம் பதிவை தொடங்குகிறேன்.
"என்னைத் தாண்டி செல்லும் போதெல்லாம் திரும்பிப் பார்ப்பாள்!
இப்போது தான் தெரிந்தது,
அவள் திரும்பி மட்டும் தான் பார்த்தாள்-விரும்பிப் பார்க்கவில்லை என்று!"

இந்தக் காதல் வந்தாலே இப்படித்தான். அத விடுங்க.

இன்றைய தினமலர் செய்திப்பக்கத்தில் படித்த ஒரு பயனுள்ள தகவலை
அனைவரிடமும் பகிர்வதில் மகிழ்ச்சி.
யாரிடமும் சொல்லக்கூடாத 8 ரகசியங்கள் :
  1. ஒருவரது வயது
  2. பணம் கொடுக்கல் வாங்கல்
  3. வீட்டு சச்சரவு
  4. மருந்துகளில் சேர்க்கப்பட்ட பொருட்கள்
  5. கணவன்-மனைவி அனுபவங்கள்
  6. செய்த தானம்
  7. கிடைக்கும் புகழ்
  8. சந்தித்த அவமானம்
இதுவரை பின்பற்றவில்லை எனில் இனிமேல் இவற்றை மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள்.
பேருந்து கட்டண உயர்வு பற்றி மக்களின் அரசல் புரசல் பேச்சுகள்
இப்போது அடங்கி விட்டது.மறுபடியும் எரிபொருள் விலை உயர்கிறது என்ற செய்தி வருத்தமளிக்கிறது.
இருப்பினும், "குடிமகன்"கள் வருத்தப்படும் அளவுக்கு, சரக்கு விலை அதிரடியாக உயர்த்தப்படும் என்ற செய்தி ஆறுதல்
அளிக்கிறது (அந்த விலையேற்றத்திற்கு எதிர்ப்பு போராட்டங்கள் வராது என்பதால்.)
எப்படியோ இந்தியப் பொருளாதாரம் முன்னேறினால் மகிழ்ச்சி தானே!

குழந்தைகளுக்கு சொல்ல கதைகள் இல்லையா? இது உங்களுக்காக..அதுவும் ஆங்கிலத்தில் அவர்களுக்கு சொல்லவும்,
படங்களுடன் காண்பிக்கவும் ஒரு தளம் இருக்கிறது.
இதில் பலவித விளையாட்டுகள்,பாடல்கள் என அனைத்தும் இருக்கிறது.
குழந்தைகளின் ஓய்வு நேரத்தை இது போன்ற பயனுள்ள தளங்களில் செலவிட வைத்தால்,தொலைக்காட்சி மோகம் அவர்களுக்கு குறையும் அல்லவா?
தள_முகவரி: http://www.kidsone.in/tamil/

Wednesday, December 14, 2011

கொங்கு நாடு - பொடிநடை பயணம்!

நான் எனது சொந்த ஊரிலிருந்து, கோவை வந்து ஒரு வருடத்திற்கும் மேல் ஆகிறது.என் நகர வாழ்க்கை பற்றி கிராமத்தில் அதிசயமாகப் பேசுவதைப்பார்க்கும் போது சிரிப்பு தான் வருகிறது எனக்கு.

"இக்கரைக்கு,அக்கரை பச்சை" என்பது பழமொழி மட்டுமல்ல, நிஜ மொழியும் தான்.

நேற்றோடு, என் முதல் பணியில் சேர்ந்து ஒரு வருடம் முடிந்து விட்டது.மிக்க மகிழ்ச்சி.கொண்டாட வேண்டுமே என்று நினைத்ததன் விளைவாக, படம் பார்க்கலாம் என முடிவெடுத்தேன்.

பேருந்தில் இருந்து இறங்கி, திரையரங்கு நோக்கி நடக்கத்துவங்கினேன்.

அது ஒரு பிரபல சாலை.எப்போது அதிக கூட்டம் அலைமோதும் இடம்.
போன வாரம் பார்த்தபோது, சுவர்களில் வெற்றிலை எச்சில் கறைகள்,விளம்பர சுவரொட்டிகள்,சாலையோரக்கடைகளின் எச்சில் இலைகள் சகிதமாக காட்சியளித்தது.இன்று பெரிய மாற்றம்.

கூட்டம் மாறவில்லை.சுவர்கள் சுத்தமாக இருக்கின்றது. எப்படி? விடை தெரிந்ததும் சிரிப்பதா? பாராட்டுவதா? என தெரியவில்லை.சுவர்களில் பல்வேறு மதங்களின் சின்னங்களும்,கடவுள் உருவங்களும் பதிக்கப்பட்டிருந்தது.கடவுள் எதைத் தடுக்கிறாரோ இல்லையோ அந்த சுவற்றைப் பாதுகாக்கிறார். நல்ல முயற்சி.

மாலை 6.30 காட்சி நேரம்.மயக்கம் என்ன திரைப்படம்.

விமர்சனம் நிறைய படித்திருப்பீர்கள்.ஆக, கதை பற்றி அதிக விவாதம் தேவையில்லை என் நினைக்கிறேன்.


ஒருவரியில் சொல்லப் போனால், "முயற்சியுடையார்-இகழ்ச்சியடையார்!"
அடுத்த வரியில் சொன்னால், "ஆவதும் பெண்ணாலே! அழிவதும் பெண்ணாலே"- இங்கு முதல் ரகம்.
மூன்றாம் வரியில் சொல்லச் சொன்னால்,"சித்திரமும் கைப்பழக்கம்" - இது கேமராவிற்கும் பொருந்தும்.

படம் முடிந்த பின்னர் வேகமாக வெளியே வந்தேன். இல்லையெனில் வாகனங்களுக்குள் புழுபோல நெளிந்து கொண்டிருக்க வேண்டும் என்பதால்.

எனது கைப்பேசியில், இரண்டு மூன்று தவறிய அழைப்புகள்(தவறவிட்ட அழைப்புகள்). இப்போது பேசும் மனநிலையில் இல்லை.பேருந்து பிடித்து அறைக்கு விரைவாகச் செல்ல வேண்டும்.இப்போதே மணி 9.20யைத் தொட்டு விட்டது.

20 நிமிடப் பயணம். இன்று இரவு எங்கு சாப்பிடலாம் என நினைக்கையில், கண்களில் பட்டது ஒரு உணவகம்.

இன்று அங்கு சாப்பிடுவது தான் சரியாக இருக்கும்.ஏனென்றால், பணியில் சேர்ந்த முதல்நாள், இரவு உணவு அங்கு தான் சாப்பிட்டேன்.தரம் சற்று குறைந்திருந்தது.ஒரு வருடம் ஆகிவிட்டது. எவ்வளவோ மாற்றம்.

நடக்கத் துவங்கினேன்.அந்த வழி நெடுக்க ஏராளமான உணவகங்கள் இருக்கின்றன.கிட்டத்தட்ட அனைத்து கடைகளிலுமே நான் சில நாள் வாடிக்கையாளனாக இருந்திருக்கின்றேன். இப்போதும் அப்படித்தான்.

எங்கள் ஊரில் இருந்த நாட்களில் ஏதாவது ஒருநாள் தான் "ஓட்டல் உணவு".அது பெரும்பாலான நேரம் பரோட்டாவவாகத் தான் இருக்கும்.
ஆக,அப்போதெல்லாம் ஓட்டல் என்றாலே பரோட்டா தான்  கண்முன் வரும்.ஆனால், இங்கு வந்த பிறகு உணவகங்களின் பல வகை உணவுகளைப் பற்றி அறிந்து கொண்டேன்.
  • ஒரு கரண்டி மாவினை அப்படியே ஊற்றி,ரெண்டு திருப்பு திருப்பிக் கொடுத்தால் வீட்டு தோசை.
  • அதே மாவினை, ஊற்றிய பின்னர் கல்லில் பரவவிட்டு எடுத்தால், சாதா தோசை. நல்லா வெந்து மொறுமொறு என இருந்தால் "ஸ்பெஷல் தோசை"
  • இரண்டு கரண்டி மாவினை பெருசா ஊத்தி எடுத்தா ஊத்தாப்பம்.(சில மிகைத் துணைகளை சேர்த்து, வெங்காய ஊத்தாப்பம், தக்காளி  ஊத்தாப்பம், முட்டை ஊத்தாப்பம், என நிறைய இருக்கு)

இது போல முட்டை உணவுகளிலும் பல ரகம்.
  • முட்டையை கல்லில் உடைத்து விட்டு, ஒருபக்கம் வேக விட்டுக் கொடுத்தால் ,ஆஃபாயில்.
  • அதை இரண்டு புறமும் வேக வைத்தால் ஃபுல்பாயில்.
  • வெங்காயம்,கொத்தமல்லி சேர்த்து கொஞ்சம் வேக விட்டால், ஆம்லெட்.
  • அதே வெங்காயத்துடன்,முட்டையை ஒரு பக்கம் வேக விட்டு, மடித்துக் கொடுத்தால் அது கலக்கி.
இப்போது எனது சிறுவயது சிறப்பு உணவு - பரோட்டா.
  • சில்லி பரோட்டா
  • வீச்சு பரோட்டா
  • முட்டை வீச்சு பரோட்டா
  • முட்டை பரோட்டா
  • கொத்து பரோட்டா
இது போல நிறைய இருக்கின்றன.எல்லாமே நான் சுவை பார்த்து விட்டேன்.

வெளி உணவுகள் உடலுக்கு நல்லதில்லை தான்.வேறு வழியில்லை. சமைக்கும் வசதி அறையில் இல்லை என்பதால் பொறுத்துக்கொள்ள வேண்டி இருக்கிறது.

வீட்டை விட்டு வெளியே வந்து, காசுக்காக உழைத்து வாழ்கின்ற பல இளைஞர்களுக்கு,இது போன்ற சிறு உணவகங்கள் தான் உறவினர்கள் வீடு போல.காசு கொடுக்கிறோம் அது மட்டும் வேறுபாடு.

எனது அறைக்கு வெகு அருகில் பெட்டிக்கடை ஒன்று இருக்கிறது.
பல பன்னாட்டு நிறுவனங்கள் அருகில் இருப்பதால் இரவில், சிகரெட் வியாபாரம் அங்கு ஜோர்.

சற்று தள்ளி ஒரு ஜோடி நின்று கொண்டிருத்தது.பெண்ணிற்கு சம உரிமை கொடுக்கிறான், புகைக்கையில். இருவரின் இழுப்பில், சாம்பலாய் இறக்கிறது அந்த சிகரெட்.

கலாச்சார சீர்கேடு இது தானோ!! அதிர்ச்சி தெளியாமலே அறையை அடைந்தேன்.


எப்போது உறங்கினேன்? தெரியவில்லை..

திரைகடல் ஓடியும், கலாச்சாரத்தைக் கெடுக்காத,உறவுகளைப் பிரிக்காத திரவியம் தேடு!!

யாராவது என் பேனாவைப் பார்த்தீங்களா?

"அம்மா! இங்க வச்சிருந்த என்னோட பேனா எங்க?".
"அந்த மேசை மேல தான் இருந்துச்சு! நால்லா தேடிப் பாரு!!".
நானும் அரைமணிநேரமாகத் தேடுகிறேன்.கிடைக்கவில்லை.

ராசியான பேனா! எவ்வளவோ ஸ்டைலா புது புது பேனா வந்தாலும்,
இந்த பேனா மேல எனக்கு காதல் அதிகம்!ஐந்து வருட பிணைப்பு எங்களுக்குள்! அழகான என் எழுத்துக்கள் என்றும் அழகாக இருக்க வேண்டி, என் அப்பா வாங்கித்தந்த பேனா அது.

அந்தப் பேனாவினால் எழுதத் துவங்கினாலே,எழுத்துக்கள் உயிர் பெற்றது போல எனக்குள் உணர்வு வரும்.அது விவரிக்க முடியாத இன்பம்!
அந்தப் பேனாவைத்தான் நான் தேடிக்கொண்டிருக்கிறேன்.

"பேனா கிடைச்சுதா?" என்ற கேள்வியோடு அம்மா என் அறைக்குள் வந்தாங்க.
இருவருமாக அலமாரி,மேசை,படுக்கை என எல்லா இடங்களிலும் தேடினோம்.

சிறிது நேரத்துக்கு பிறகு, ஏதோ நியாபகம் வந்தது போல, "அடடா..மறந்தே போய்ட்டேன்!நீ காலையில ஆபிஸ் போனதுக்கு அப்புறம், காமாட்சி அக்கா வந்துச்சு. ஏதோ அவங்க பொண்ணுக்கு லோன் வாங்க விண்ணப்பம் பூர்த்தி செய்யனும்னு பேனா கேட்டுச்சு. நானும் அந்த பேனாவை எடுத்துக் குடுத்திட்டேன்.இன்னும் கொண்டு வந்து தரலை..நானும் வேலையா இருந்ததால, மறந்தே போய்ட்டேன்!!","அந்த பேனாவை எதுக்குமா
குடுத்த?" என்று கூறிவிட்டு கோபத்தோடு வாசலை நோக்கிச் சென்றேன்."மணி ஆறு ஆகிடுச்சு! அவங்க வீட்டுக்கு வந்திருப்பாங்க!
போய் வாங்கிட்டு வந்துடு..இனிமே நான் யாருக்கும் குடுக்கல டா! கோபப்படாதே!",என்ற அம்மாவின் குரல் வாசல் வரை கேட்டது.

காமாட்சி அக்கா வீடு, எங்க வீட்டிலிருந்து இரண்டு வீடு தள்ளி இருக்கிறது.எங்க தெருவில் மொத்தமே 6 வீடுகள் தான், அதில் படிச்ச உயிர்கள் ரெண்டு பேர் தான். ஒன்னு நான். இன்னொன்னு, காமாட்சி அக்கா பொண்ணு யமுனா.நான் படிச்சு முடிச்சு வேலைல இருக்கேன். யமுனா கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கிறாள்.நல்ல குடும்பம்.

லேசான பனிக்காற்று, கார்த்திகை மாதம் என்பதை நினைவுப்படுத்தியது.
காமாட்சி அக்கா வீட்டுக்கு வெளியே கொடியில் காய்ந்த துணிகளை எடுத்துக்கொண்டிருந்தார்.
என்னைப்பார்த்ததும்,"தம்பி! வாங்க.இப்ப தான் யமுனா கிட்ட சொல்லிட்டு இருந்தேன்.உள்ள வாப்பா!",நான் வாசலில் நுழைந்தபோது அடுத்த கட்டளை,"யம்மு!!! குமார் அண்ணனோட பேனாவை எடுத்துட்டு வா!" என்று சொல்லியபடிதுணிகளை எடுத்துக்கொண்டு அறைக்குள் போய்விட்டார்.

"அண்ணா! எப்படி இருக்கீங்க?",இது யமுனா."நல்லா இருக்கேன் யம்மு.
காலேஜ் எப்படிப் போகுது?"என்றபடி பேனாவை வாங்கிகொண்டேன்."காலேஜ் ஜாலியா போகுது.பரீச்சை வந்தா தான் கடுப்பா இருக்கும்!" ,"அது அப்படித்தான். கல்லூரி முடிச்சதுக்கு அப்புறம்,இந்த எரிச்சல் கூட சிரிப்பூட்டும்!"என்றேன்.அவள் சிரித்தாள்.

சிறிது நேரப் பேச்சுக்குப் பின்னர், காமட்சி அக்கா கொடுத்த தண்ணீரை பருகிவிட்டு வெளியே வந்தேன்.

பேனா எனது சட்டைப் பையில்.

வீடு வந்து சேரும் போது மணி 7. ஒரு கதை எழுத நினைத்து தான் அந்த பேனாவைத்தேடினேன்.உடை மாற்றிக்கொண்டு, வெள்ளைத்தாளுடன் மொட்டை மாடியில் அமர்ந்து யோசிக்கத்துவங்கினேன்.

"வந்து சாப்பிடு டா! மணி எட்டாகப் போகுது." அம்மாவின் குரல் கற்பனைகளைக் கலைத்து விட்டது. "இப்ப தாம்மா வந்தேன்.அதுக்குள்ள என்னசாப்பாடு?பசிக்கல.நான் அப்புறமா சாப்பிடுறேன்!",என்றேன் கோபமாக. அப்படி சொன்னேனே தவிர பசி வயிற்றைக் கிள்ளியது.ஒரு வரியாவது எழுதிவிட்டு சாப்பிடப் போலாம் என அமர்ந்திருந்தேன்.

நிலா,வானம்,நட்சத்திரம்,மேகம் எனப்பார்த்த எனக்கு,கதை எழுதும் எண்ணம் மாறி, கவிதை எழுதத் தோன்றியது.

"நிலவே! உனக்கும் எனக்கும் இடையில் உணர்வுப்பாலமாய் என் கவிதை" எனத்துவங்கிய போது பசி உணர்வு மேலோங்கிவிட்டது. பேனாவையும், தாளையும் மேசை மேல் போட்டுவிட்டு அவசர அவசரமாக
சாப்பிடச் சென்றேன்.உண்ட மயக்கம். உடனடி உறக்கம். 

காலை எழுந்து அலுவலகம் செல்லும் அவசரத்தில்
இரவு நடந்த கவிதை முயற்சி மறந்தே போய்விட்டது.

மாலையில் வீட்டுக்கு வந்த உடன் மீண்டும் தேடினேன்.
"அம்மா! இந்த மேசை மேல வச்சிருந்த என் பேனாவை பார்த்தீங்களா"!!

மறதி, நம் தேசிய வியாதி - கமல்ஹாசன்

Monday, November 28, 2011

சின்னச் சின்னக் கவிதைகள்!

                                                     ஜில் ஜில் காதல்!
உச்சி முதல் பாதம் வரை
குச்சி ஐஸ் உருகுதடி-உன்
எச்சில் படாதா என்று..

                                                      அவள்!
அவள் வாய் திறந்து பேசியதை
நான் பார்த்துக் கொண்டிருந்தேன் வாயைத் திறந்து...

                                                       அன்பே!
இரவில் உன்முகம் காண விழையும் ஆவல் எனக்கும், நிலவுக்கும் ஒன்று தான்..!!
ஆனால்,
நிலவுக்குத் தடையாய் உன் வீட்டு மாடி..
எனக்குத் தடையாய் உன்னோட டாடி..!!!

                                                  தேவதையே!
உறக்கக் கலக்கத்திலே, பிரம்மன் உன்னைப் படைத்தானோ?
என் உறக்கத்தைக் கலைக்க!

                                    சின்னக்குயிலாய் என்னவள்!

காற்றினில் கலைந்தோடும் மேகங்களே!-தென்னங்
கீற்றினில் நுழைந்தோடும் தென்றல் காற்றே!
வயற்காட்டினில் பாய்ந்தோடும் ஓடை நீரே-எந்தன்
மூச்சினில் நிறைந்தவள் பாடுகிறாள்,நின்று
கேட்டபின் செல்லுங்கள் தோழர்களே!


- அன்புடன்!! இணையகவி

Thursday, November 24, 2011

உங்களின் நலனுக்காக!!

அனைவருக்கும் வணக்கம்.
தினம்தினம் நாம் எவ்வளவோ செய்திகளைப் படிக்கிறோம்.எத்தனையோ
நிகழ்ச்சிகளைப் பார்க்கிறோம்! புதிய முகங்களை சந்திக்கிறோம்!
சில பாடங்கள்,சில அறிவுரைகள்,சில ஆதங்கங்கள்..இன்னும் எத்தனையோ!!
ஆக, ஒவ்வொரு நாளும் நமக்கு முக்கியம் தான். அதைவிட, அந்தநாளில் நம் உடல்நலம் பேண நாம் என்ன செய்கிறோம்
என்பதும் முக்கியம்.

ரஞ்சன் தாஸ்! (முதன்மை செயல் அதிகாரி - SAP India)
42 வயதே ஆன இவர் கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி மாரடைப்பால் இவ்வுலக வாழ்வை நீத்தார்.




இத்தனைக்கும், அவர் தினமும் உடற்பயிற்சி செய்வதையும், நடைபயிற்சி செய்வதையும் வழக்கமாக கொண்டிருந்தார்.
அவரது மறைவிற்கு முக்கிய காரணங்கள்:
  • - அவரது உறக்கம் தினமுன் 4-5 மணி நேரம் மட்டும்.
  • -அதிக வேலைப் பளுவால் விளைந்த மன அழுத்தம்.
ஆக, கணினி பொறியாளர்கள் மற்றும் அனைத்து பிற பணியாளர்களும் இதனைக் கருத்தில் கொண்டு,தினமும் 7 மணி நேரம் உறங்காவிட்டால் அது நெருப்புடன் விளையாடுவது போன்றது என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

அடுத்த செய்தி, கொஞ்சம் அதிர்ச்சியளிக்கக் கூடியதும் நம்ப முடியாததுமாக இருந்தது எனக்கு.
பரோட்டா நீரழிவு நோயை உண்டாக்குகிறது. இது செய்தி.
இதன் முழு விவரம் இதோ.

"பரோட்டா செய்வதற்கு நாம் பயன்படுத்தும் மைதா மாவு, கோதுமை மாவினை பனசாயல் பெரோசிடே(benzoyl peroxide) கொண்டு வெண்மையாக்குவதன் மூலம் கிடைக்கிறது.

இந்த வேதிப்பொருள் தலைமுடிக்கு அடிக்கும் சாயத்தில் உள்ள ஒரு பகுதிப்பொருள்.

இது மாவில் உள்ள புரதத்துடன் சேர்ந்து நீரழிவுநோய்க்கு காரணமாகிறது", என்று அந்தச் செய்தியில் குறிப்பிட்டிருந்தார்கள்.
மேலும் ஐரோப்பா,இங்கிலாந்து மற்றும் சீனா ஆகிய நாடுகளில் இந்த மைதா தடை செய்யப்பட்ட உணவுப்பொருள் என்பது கூடுதல் தகவல்.

மைதா, மரவள்ளிக்கிழங்கு மாவிலிருந்து தயாரிக்கிறார்கள் என்று இவ்வளவு நாளாக நினைத்திருந்தேன்.அது சரியா அல்லது இது சரியா என இப்போது குழப்பமாக உள்ளது.

ஆனாலும், பரோட்டா அவ்வளவு ஆரோக்கியமான உணவு இல்லை. அதில் நார்சத்து கிடையாது. ஆகவே அது சீரணத்துக்கு உகந்ததல்ல.
எது எப்படியோ குழந்தைகளின் உணவில், பரோட்டா,மற்றும் இதர பேக்கரி பதார்த்தங்களை தவிர்க்கவும்.

இன்றைய செய்தி இவ்வளவு தான். நாளை மீண்டும் சந்திப்போம்!



Tuesday, November 22, 2011

ஆடம்பர பயணம் - அலட்டல் இல்லாமல்!

காந்திபுரம் பேருந்து நிலையம் !!
தள்ளு வண்டிக்கடைகள் தங்கள் வியாபாரத்தில் மும்முரமாக இருக்க,
தங்கள் ஊருக்கு செல்லும் பேருந்தைத் தேடியபடி மக்கள் அலைந்துகொண்டிருந்த மாலை வேளையில்,கூட்டத்தைக் கடந்தபடி நானும் நடந்துகொண்டிருந்தேன்.
கார்த்திகைப்பனி கொஞ்சம் கன்னம் தொட்டது.

நான் எதிர்பார்த்த கோவை - கோபி பேருந்து, நிலையத்துக்குள் நுழைந்ததும் பலரின் கைக்குட்டைகள் பேருந்துக்குள் பறந்தன இடம் பிடிக்க..
எனக்கு அதில் விருப்பம் இல்லை (அப்போது என் கையில் கைக்குட்டை இல்லை) என்பதால், நான் வேகமாக பின் வாயிலில் ஏறி சாளர இருக்கை ஒன்றைப் பிடித்து அமர்ந்து கொண்டேன்.

நடத்துனருடன் நடக்கும் சில்லறை சம்பந்தமான சில்லறை வாதங்களை நான் விரும்பாததால், எப்போதும் சரியான பயணச்சீட்டு விலையை நான் எடுத்துச் செல்வது வழக்கம். 28ரூபாய். சரிபார்த்து எடுத்து, என் சட்டைப்பையில் வைத்துக்கொண்டு , சாளரக்கம்பிவழியே வேடிக்கை பார்க்கத்துவங்கினேன்!

பத்து நிமிடங்கள் கரைந்தன.

காலையில் 'பேருந்து பயணச்சீட்டு மற்றும் பால் விலையை உயர்த்தி விட்டார்கள்', என்ற செய்தியைப் படித்தது நினைவுக்கு வந்தது .
இது அவ்வப்போது நடக்கும் ஒன்று என்றாலும், புதிய விலையை அறியும் ஆவல் அதிகரித்தது..கிட்டத்தட்ட அனைவரின் முகத்திலும் அதே எதிபார்ப்பு.

முகத்தில் புன்னகை தவழ நடத்துனர் உள்ளே நுழைந்தார்.அவர்
கையில் வைத்திருந்த பையில் இருந்து வரும் வழக்கமான சில்லறை சத்தம் சுரம் குறைந்து கேட்டது!
கரகரப்பான குரலில்,"பயணச்சீட்டு விலை 49 ரூபாய்.அனைவரும் சரியான சில்லறை எடுத்து வைக்கவும்" என்று சொன்னதும் அனைவரின் முகத்திலும் அதிர்ச்சி அலை!
ஒரு ரூபாய் அல்லது இரண்டு ரூபாய் என்றால் பரவாயில்லை! ஒரேயடியாக 21 ரூபாய் ஏற்றி இருப்பது சராசரிக் குடிமகனுக்கு விழுந்திருக்கும் பெரும் இடி எனவே தோன்றியது.
என் அருகினில் அமர்ந்த ஒரு அரசுப்பணியாளர் இந்த விலையேற்றத்தின் காரணத்தை விவரிக்கத்துவங்கினார்.
"பொதுத்துறை தனக்கென வருவாய் மீதம் இல்லாமல், அரசிடம் கடன் வாங்கும் நிலையில் இருப்பது வேதனை அளிக்கிறது.ஓட்டுனர் மற்றும் நடத்துனர் தினசரி மீத வருமானமும் குறைக்கப்பட்டுள்ளது.
பலரும் ஆட்சியைக் குறை சொல்கிறார்கள்! அது நியாயம் இல்லை.
வாகன எரிபொருள் விலை கொஞ்சம் கொஞ்சமாக ஏறியபொழுதே, பயணச்சீட்டு விலையை அரசு உயர்த்தி இருக்க வேண்டும்.
ஆனால், மக்கள் தம் ஆட்சியை நல்லாட்சியாகக் கருதவேண்டி, கடந்த அரசு, பொதுத்துறைக்கு இழப்பினை ஏற்படுத்தியுள்ளது!!
ஆக, இதன் பிறகு வரப்போகும் விலை ஏற்றத்துக்கும், காரணம் இருக்கிறது. அரசு மக்களை ஏய்த்து எதையும் அதற்கென ஈட்டப் போவதில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்!!" என்றார்.

அவர் சொன்னதுபோல,அரசியல் பின்னணியை அலசிப்பார்க்கும்போது விலையேற்றியதில் தவறொன்றும் இல்லை எனவே தோன்றுகிறது.
ஆனாலும் அடித்தட்டு மக்களை நினைக்கும் போது வருத்தமாய் இருக்கிறது!!
அரசியல்வாதிகள் இதனைப் புரிந்துகொள்வார்களா!!
(இருக்கும் வரை இருப்பதைக் கொள்ளையடித்து, வரப்போகும் தன் சந்ததிக்கு சொத்து சேர்க்கும்
உள்ளங்களே!! உங்களால் பலர் சந்ததியிழந்து நிற்கின்றார்கள்! உணர்ந்துகொள்ளுங்கள்!!)

நீண்ட நேர பயண முடிவில் வீடு வந்து சேர்ந்தேன்.

                                      <<பயணம் முடிந்தது>>



Friday, November 18, 2011

படித்ததில் பிடித்தது! - நான் தொலைத்த வாழ்க்கை

[இணையத்தில் படித்த கவிதை இது. பொருள் மாறாமல்,
கவிதை நடைக்காக சில வரிகள் திருத்தம் செய்யப்பட்டுள்ளது]

வயல்வெளி பார்த்து
வறட்டி தட்டி
ஓணாண் பிடித்து
ஓடையில் குளித்து
எதிர்வீட்டில் விளையாடி
எப்படியோ படித்த நான்
ஏறிவந்தேன் நகரத்துக்கு !

சிறு அறையில் குறுகிப் படுத்து
சில மாதம் போர்தொடுத்து
வாங்கிவிட்ட வேலையோடு
வாழுகிறேன் கணிப்பொறியோடு

மௌசு தொட்டு
வாழும் வாழ்க்கை
பழகிப் போகுமோ ?

வால்பேப்பர் மாற்றியே
வாழ்க்கை
தொலைந்து போகுமோ ?

சொந்த பந்த
உறவுகளெல்லாம்
ஷிப் பைலாய் (zip file)
சுருங்கிப் போகுமோ?

வாழ்க்கை மொத்தமும்
தொலைந்து போகுமோ!!-இது
புரியாது
புலம்புகிறேன்
நித்தமும்!

தாய் மடியில் தலைவைத்து
நிலவு முகம் நான் ரசித்து
கதைகள் பேசி
கவலைகள் மறந்த காலம்
இனிதான் வருமா ?

நினைத்த நொடியில்
இதயம் நனைக்கும்
இந்த இனிய வாழ்வு -இனி
இளைய தலைமுறைக்குக் கிடைக்குமா ?

சொந்த மண்ணில்
சொந்தங்களோடு
சோறு திண்பவன்
எவனடா?
இருந்தால்
அவன் போல சொர்க்கம் கண்டவன் யாரடா!


 

Friday, November 4, 2011

அம்மா என்னும் தமிழ் வார்த்தை

அண்ணா பல்கலைக் கழகத்தில் தமிழறிவு மணியன் அவர்கள் ஆற்றிய 'தழிழுக்கு தலைவணக்கம்' எனும் சொற்பொழிவிலிருந்து...


நம் வீட்டில் கூட தற்போது தமிழில் பேசுவதை மறந்து விட்டோம். குழந்தைகள் பெற்றோரை 'மம்மி, டாடி' என்று தான் அழைக்கின்றனர். ஆனால் தமிழில் 'அம்மா' எனும் வார்த்தை எப்படி உருவானது என்பது பலருக்கு தெரியாது.

அம்மா என்பதில் உள்ளிருக்கும் உங்களுக்கு உயிர் கொடுத்தவள் தாய் என்பதால் முதல் எழுத்தாக 'அ' எனும் உயிர் எழுத்தையும், உயிர் வளர மெய் (உடல்) தேவை என்பதால் 'ம்' எனும் மெய் எழுத்தை இரண்டாவதாகவும், 10 மாதம் கழித்து உயிர், மெய் இரண்டையும் சேர்த்து உருவமாக உலவ விடுவதால் 'மா' எனும் உயிர் மெய் எழுத்தை வைத்துள்ளனர்.

அதே போன்று தான் 'அப்பா' என்ற சொல்லும் அமைத்துள்ளது. இதில் தாய் மென்மையானவள் என்பதால் தான் அம்மா என்ற சொல்லில் 'ம்' எனும் மெல்லின எழுத்து வந்துள்ளது. அப்பா எப்போதும் வலிமையானவர் என்பதால் அதில் 'ப்' எனும் வல்லின எழுத்து பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே தமிழ் என்பது பார்த்து பார்த்து செதுக்கப்பட்டுள்ள மொழி என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.


Wednesday, October 12, 2011

வாகை சூட வா!!




முக்கிய நடிகர்கள் :
விமல்,இனியா,பாக்கியராஜ்,பொன்வண்ணன்
கதைச்சுருக்கம்:
1966ஆம் ஆண்டு:

எங்க வீட்டுப்பிள்ளை படத்தில், எம்.ஜி.ஆர் அவர்கள் நம்பியாரிடம் சவுக்கடி வாங்கும் காட்சியை திரையரங்கில் பார்க்கும் ஒரு நரிக்குறவன் கோபமடைந்து,நம்பியாரை துப்பாக்கியால் சுடும் காட்சியுடன் அமர்க்களமாக துவங்குகிறது படம்.

சர்க்கார் உத்தியோகம் தான் சமுதாயத்தில் மதிப்பையும், சொந்தத்தில் ஒரு மரியாதையையும் கொடுக்கும்.ஆக தன்னால் முடியவில்லை என்பதால்  மகனையாவது அரசாங்க வேளையில் அமர்த்த வேண்டும் என்ற குறிக்கோள் கொண்ட சராசரி அப்பாவாக இறுதிவரை வலம் வரும் பாக்கியராஜ் முருங்கைக் காயுடன் அறிமுகமாகிறார்..

விமல் படிப்பை முடித்து ஆசிரியர் வேலைக்கு சேர விழையும் நடுத்தர குடும்பத்து இளைஞன்.தந்தையின் விருப்பப்படி,கிராம சபா அமைப்பு அளிக்கும் சம்பளம் மற்றும் சான்றிதழுக்காக  "கண்டேடுத்தான்காடு" என்ற கிராமத்துக்கு,வாத்தியாராக செல்கிறான் நமது கதாநாயகன்."செங்கல் சூலைக்காரா" என்ற பாடலுடன் கிராமம் நமக்கு அறிமுகமாகிறது.

செங்கல் சூளையில் கல் அறுக்கும் குழந்தைகளுக்கு கல்வி புகட்ட விமல் படும் பாடு,தேநீர்கடை வைத்திருக்கும் பெண்ணாக வரும் கதாநாயகி இனியா, தனது காதலை வாத்தியாருக்கு புரியவைக்க எடுக்கும் முயற்சிகள்,மக்களை அடிமையாக நினைக்கும் பொன்வண்ணனுக்கு ஊர்மக்கள் கொடுக்கும் பதிலடி ஆகியவற்றை மையமாக வைத்து கதை நகர்கிறது. 

விமல் குழந்தைகளுக்கு கல்வி புகட்ட எடுக்கும் முயற்சிகள் வெற்றியடைந்ததா?இனியாவின் காதல் கைகூடியதா ? விமலுக்கு சர்க்கார் உத்தியோகம் கிடைத்ததா? அன்றாட உணவுக்கு படியளக்கும் பொன்வண்ணனை பகைத்த ஊர்மக்களின் நிலை என்ன? என்பதற்கு பதில் தான் மீதி கதை.

அருமை:
காட்சியமைப்பு
கதையோடு தொடர்புடைய பாடல் வரிகள்
யதார்த்தமான வசனங்கள்
இனியாவின் இயல்பான நடிப்பு
கதை முழுக்க நம்முடன் உறவாடும் ஊர்மக்கள்
குழந்தை நட்சித்திரங்கள்
.
இயக்குனருக்கு:
நல்ல முயற்சி. பாராட்டுக்கள்.
மின்சாரம் ,தொலைகாட்சி இல்லாத அந்தக் கால மக்கள் வாழ்க்கையையும் , இளமைக்கல்வியின் மகத்துவத்தையும் உணர வைத்த மனதைத் தொடும் திரைப்படத்தை கொடுத்ததற்கு நன்றிகள்.



Monday, October 10, 2011

மொக்கை எனப்படும் நகைச்சுவை விருந்து

கிருஷ்ணதேவராயரின் அரசவையில் தெனாலி ராமன் என்ற ஒருவர் இருந்தாரல்லவா?அவருக்கு இன்னொரு பெயர் "விகடகவி".
விகடங்கள் பேசி சிரிக்கவும் சிந்திக்கவும் செய்யும் கவிஞன் என்பது அதன் பெயர் விளக்கம்.

கொஞ்சம் விளக்கமாக சொன்னால், உங்களது தவறை மற்றவர் நகைக்கும்படியும்,உங்களுக்கு உறைக்கும்படியும் நயம்பட உரைப்பது
விகடம்.
ஆக விகடப் பேச்சின் நோக்கம் சிரிக்க வைப்பதல்ல. ஒரு செய்தியை மறைபொருளுடன் சூசகமாக உரைப்பதுவே
ஆகும்.அனுபவிப்பவர்கள் ஆனந்தமடைவார்கள்.ஆராய்பவர்கள் எரிச்சல்படுவார்கள்.


நேற்று ஒரு பட்டிமன்ற நிகழ்ச்சியில் லியோனி அவர்கள் சொன்ன ஒரு குட்டிக் கதை இந்த கட்டுரைக்கு
ஒரு மேற்கோளாக இருக்கும் என நம்புகிறேன்.

ஒரு ஊருல பரமசிவன் அப்டின்னு ஒருத்தர் இருந்தார்.
அந்த ஊருக்குள்ள எதாவது பிரச்சினை வந்தாலோ, அல்லது யாருக்காவது
எந்த விஷயத்துலயாவது சந்தேகம் வந்தாலோ இவருகிட்ட தான் கேட்பாங்க.
எதையுமே தெரியாதுன்னு சொல்ல மாட்டார். எல்லாத்துக்கும் ஒரு பதில் வச்சிருப்பார்.அதனால அவருக்கு ஊரில "பதில் சொல்லி பரமசிவன்" அப்டின்னு ஒருபட்டப் பெயர் இருக்குது.
ஒரு நாள் அவரு பேருந்து நிலையத்துல நின்னுகிட்டு இருந்தார்.இரவு 10 மணி. இவரைப் பத்தி தெரியாத ஆசாமி ஒரு சந்தேகம் கேட்க அவருகிட்ட வந்தார்.உரையாடல் இதோ!

அவர் : "ஐயா! இதுதான் கடைசி பஸ்சா?
ப.சிவன்: இல்லைங்க, நாளைக்கு காலையில ஒரு வண்டி இருக்கு.
அவர் : அட அது இல்லங்க! இந்த பஸ்சுக்கு முன்னாடி ?
ப.சிவன்: இந்த பஸ்சுக்கு முன்னாடி ரெண்டு Head light இருக்கு.
அவர் :(கோபத்தோடு ) இதுக்கு பின்னாடி?
ப.சிவன்:ரெண்டு Danger light இருக்கு.
(வேறு மாதிரி கேட்க நினைத்த அவர்)
அவர் :இந்த பஸ்ஸ விட்டா ?
ப.சிவன் :விட்டா போய்டும்!

வந்தவர் கடுப்போடு  போய்விட்டார்
இது நமக்கு சிரிப்பினை வரவைக்கிறது. ஆனால் சந்தேகம் கேட்டவருக்கு?

இது போல நடைமுறையில் பல நிகழ்வுகளைப் பார்க்கின்றோம்.
அவைகள் நமக்கு நடக்கும் வரை வேடிக்கையாகவே தெரிகிறது.
சிரிக்கிறோம்,விகடன்களை அளவுகடந்து ரசிக்கிறோம்.

"லொள்ளு சபா",சந்தானம் வசனங்கள் என அனைத்துக்கும் நமது ஆதரவுகளை அளித்து வெற்றிபெற செய்கின்றோம்!
ஆக, மொக்கைகள் என அசிங்கப்படுத்தப்படும் இந்த நகைச்சுவை துணுக்குகளை கேலி செய்யாமல் மனதார நாம் இனி ரசித்துப் பழகுவோம்!

அழுவதற்கு நம் வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்கள் இருக்கின்றன.சிரிப்பதற்கு அப்படி வாய்ப்புகள் அதிகம் இருப்பதில்லை.

Friday, October 7, 2011

காதலிப்பது எப்படி? (சிரிப்பதற்கு மட்டும்)

1) முதலில் உங்களிடம் இருக்கும் ஃபார்மல் பேண்ட்களை துக்கி எறிந்து விட்டு, சில ஜீன்ஸ்களை வாங்கி போட்டுக்கொள்ளவும். அது புதிதாக இருந்தால் அங்கங்கே கிழித்துவிட்டு Heart டிசைன் போட்டு தைத்துக்கொள்ளவும்..


2) அந்த ஜீன்சுக்கு கொஞ்சமும் சம்மந்தம் இல்லாதவாறு சில டி- ஷர்ட்களை வாங்கி அணிந்து கொள்ளவும் (கேவலமான கலரில் இருந்தால் இன்னும் உத்தமம்). முக்கியமான விஷயம் அந்த டி - ஷர்ட்டில் மகா மட்டமான வாசகங்கள் இருந்தால் நல்லது.


3) குளிக்கிறீங்களோ இல்லையோ தலைக்கு கலரிங் பண்ணிக்கறது ரொம்ப அவசியம். தப்பித்தவறி கூட தலையில எண்ணெய் வெச்சிடக்கூடாது.


4) ஃப்ரெண்டு கிட்ட இருந்து ஓசியிலையோ இல்லை அப்பாகிட்ட கெட்ட வார்த்தையில திட்டு வாங்கியாவது ஒரு பைக் வாங்கி வெச்சிக்கறது நல்லது. முக்கியமா அந்த பைக் பல்சராவோ, அப்பாச்சியாவோ, யூனிகார்னாவோ இருக்கறது அவசியம்.


5) உங்க தங்கச்சி கிட்ட இருந்து சண்டை போட்டு ஒரு கம்மலை வாங்கி போட்டுக்குங்க.


6) சிகரெட் பிடிக்கிற பழக்கம் இல்லன்னா கத்துக்குங்க. அப்பத்தான் உனக்காக சிகரட்டையே தூக்கி போடுறேன்னு நீங்க ஒரு பிட்டு விடலாம். அவங்களுக்கும் திருத்துறதுக்கு உங்க கிட்ட ஏதாவது ஒரு கெட்ட பழக்கம் வேணுமில்ல!.


7) எங்க எல்லாம் பேன்சி ஸ்டோர் இருக்கோ அங்க எல்லாம் ஒரு அக்கவுண்ட் ஆரம்பிச்சுக்கறது நல்லது. பின்ன கிஃப்ட் வாங்கி கொடுத்தே உங்க அப்பா காசை அழிக்கணும் இல்ல!.


8) ரெஸ்ட்டாரண்ட்ல அதிகமா வெங்காயம் கலந்த ஃபிரைட் ரைஸ் சாப்பிட்டு கேர்ள் ஃப்ரெண்டை பார்க்க போனீங்கன்னா உங்க காதலுக்கு நீங்களே ஆப்பு வெச்சுக்கிட்டீங்கன்னு அர்த்தம்.


9) தெரியுதோ இல்லையோ இங்கிலீஷ்' பேச தெரிஞ்சுக்கறது ரொம்ப அவசியம். பயப்படாதீங்க. சும்மா மூணு தமிழ் வார்த்தைக்கு நடுவுல I See, Like that, Actually, இதெல்லாம் போட்டு பேச தெரிஞ்சா போதும். பாதி பொண்ணுங்களுக்கு இவ்ளோதான் தெரியுங்கிறது வேற விஷயம். இதுலையே உங்க ஆளு பாதி அவுட்.


10) நேரா லேண்ட் மார்க்குக்கோ, மியுசிக் வேர்ல்ட்'க்கோ போங்க. எதையாவது வாங்க போற மாதிரியே சீரியஸா சீன் போடுங்க. ஏன்னா வாட்ச்மேன் உங்களையே வாட்ச் பண்ணிக்கிட்டு இருப்பான். அவனுக்கு மட்டும் எப்படித்தான் தெரியுமோ? நம்மளையே கரெக்ட்டா வாட்ச் பண்ணுவான். நாம தேடுற கேசட் கிடைக்கலைங்கிற மாதிரியே ரொம்ப
ஃபீல் பண்ணி முகத்தை வெச்சிகிட்டு, அங்க இருக்கிற ரெண்டு மூணு இங்கிலீஷ் லவ் பாப் ஆல்பத்தோட பேரை மட்டும் மனப்பாடம் பண்ணி வெச்சுகிட்டு வந்திடுங்க. அந்த கேசட் பேரை சொல்லி உங்க ஆளுகிட்ட "அந்த ஆல்பம் கேட்டியா? வாவ் என்ன லிரிக்ஸ், எனக்கு தூக்கமே வரலைப்பா, உன் நியாபகமாவே இருந்துச்சின்னு சீன் போட உதவும்.
உங்க ஆளும், அடடா நம்ம ஆளுக்கு என்ன டேஸ்ட்டுன்னு உங்களைப்பத்தி ரொம்ப பெருசா எடை போட உதவும்.


11) காசு இருக்கோ இல்லையோ, பர்ஸோட உள்ளுக்குள்ள சில, பேப்பர்ஸ்'சை மடிச்சு வெச்சுக்குங்க, அடிக்கடி அதை அவங்களுக்கு காட்டுங்க ( இது ஒரு சில சமயம் உங்களுக்கே டேஞ்சரா கூட முடியலாம்) வீணாபோய் யாரவது தூக்கி போட்ட கிரடிட் கார்ட் இருந்தா பொறுக்கி எடுத்து உங்க பர்ஸ்ல வெச்சுக்குங்க. (முக்கியமான
விஷயம் கிரடிட் கார்ட் அக்செப்ட் பண்ணாத கடையா பார்த்து கூட்டிட்டு போங்க)


12) அடடா எல்லாத்தையும் சொல்லிட்டு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப முக்கியமான ஒரு விஷயத்தை சொல்ல மறந்துட்டேன். என்ன பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ தெரியாது. மாசத்துக்கு ரெண்டாயிரம் ருபாய்க்கு ரீசார்ச் கார்ட் வாங்கி வெச்சுக்குங்க.
முக்கியமான விஷயம் தப்பித்தவறி கூட நீங்க மிஸ்டுகால் கொடுக்க கூடாது.




இதெல்லாம் கரெக்ட்டா ஃபாலோ பண்ணீங்கன்னா, ம்ம்ம்ம்ம்ம்... நீங்களும் ஒரு காதல் மன்னன்தான்...