Friday, September 7, 2012

சிந்தனைத் துளிகள் - பகுதி1

நான் சமீபத்தில், சொல்வேந்தர்.சுகிசிவம் அவர்களின் சொற்பொழிவு ஒன்றைக் கேட்டேன். 

"உன்னை அறிந்தால்" என்ற தலைப்பு கொடுக்கப்பட்டிருந்தது.தன்னம்பிக்கை,சுய முன்னேற்றம் ஆகியவற்றைப் பற்றி அருமையாக விளக்கினார் அவர்.

சில துளிகள் இங்கே:
1. "உங்களைப்பற்றிய மற்றவர் அபிப்ராயங்கள்,வெறும் காலி அபிப்ராயங்கள்"


ரவீந்தர்நாத் தாகூர்,அவர் குடும்பத்தில் 13ஆவது பிள்ளை.
அனைவரின் பிறந்தநாளுக்கும் வீட்டில் உள்ளவர்கள் ஒரு புத்தகத்தில்,
பிறந்தநாள் கொண்டாடுபவர்க்கு வாழ்த்துகளை எழுதி வைப்பார்கள்.தாகூரின் பிறந்தநாள் அன்று,அவரின் பாட்டி, "மற்ற பிள்ளைகளைப் போல இல்லை தாகூர்.உன் முன்னேற்றம், எதிகாலம் பற்றி எனக்கு மிகுந்த கவலையாக இருக்கிறது!"என எழுதி இருந்தார்.இன்று நிலைமை என்ன? தாகூர் போல,அந்த 13 பேரில் எவரும் புகழை எட்டவில்லை.சாதாரண புகழா அது? இரண்டு நாட்டின் தேசியகீதம் எழுதியவர் அல்லவா அவர்.

எனவே உங்கள் எதிர்காலம்,உங்களைப் பற்றி நீங்கள் என்ன எண்ணுகிறீர்கள் என்பதைப் பொறுத்தே அமையும்!

நமது பாரதியையும் இதற்கு உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம்.அவரின் பாடல்களைப் பார்த்து,பிற பண்டிதர்கள், "பாரதியின் பாடல்கள் பாமரத்தனமானது!" என இகழ்ந்தனர்.அவர் அவற்றுக்கு சிறிதும் செவிசாய்க்கவில்லை. அவரின் நோக்கம், எளிமைத் தமிழில் நயம் சேர்த்து, படிப்பறிவில்லாதவர்க்கும் பாட்டறிவு புகட்டவேண்டும் என்பதே. அதில் அவர் உறுதியாய் இருந்தார்.இன்று அவர் பெற்றிருக்கும் புகழ் சாதாரணமானதா?

2. "உங்கள் தேர்வுகளுக்கு மற்றவர் அங்கீகாரத்தை எதிபார்க்காதே!"

நாம் ஒரு கடையில் சென்று இரண்டுமணிநேரம் செலவு செய்து,ஒரு சட்டையைத் தேர்வு செய்கிறோம்.அதை எப்போது உடுத்தப்போகிறோம் என்ற எண்ணத்திலேயே உறங்குகிறோம்.

காலையில், அந்த சட்டையைப் போடும்போதே நாம் என்ன நினைக்கிறோம்? "இந்த சட்டையைப் பற்றி அவர்கள் என்ன சொல்வார்கள்?இவர்களுக்குப் பிடிக்குமா?" என பல எண்ணங்கள் மனதில் ஓடுகின்றன.பேசும் ஒவ்வொருவரிடமிருந்தும் நம் சட்டையைப் பற்றி ஏதாவது விமர்சனத்தை எதிபார்க்கின்றோம்.

இது எதற்கு? நம் நேரத்தைச் செலவு செய்து துணியைத் தேர்வுசெய்கின்றோம்.நமக்குப் பிடித்ததால் தான் பனம் கொடுத்து வாங்கிவருகின்றோம். பிறகு தோன்றும் இந்த விமர்சன எதிபார்ப்பு எண்ணங்கள் நம் தேர்வுகள் மீது நமக்கு இருக்கும் நம்பிக்கையை சீர்குலைக்கின்றன.ஆக, வரும் விமர்சனங்களுக்கு புன்னகையை மட்டும் பதிலாய்க் கொடுத்துவிடு வேறு வேலையப் பார்க்கலாமல்லவா?

3."எல்லா யோசனைகளையும் மனதினுள் விடாதே!"



புதிதாக ஒரு முயற்சி மேற்கொள்ளப்போகின்றோம்.உதாரணமாக ஒரு தொழில் துவங்குகிறோம் என வைத்துக்கோன்டால், அதற்கு அனுபவம் வாய்ந்த பலரின் யோசனையைக் கேட்கின்றோம்.பலர் கூறும் பலவித செய்திகளையும் மனதுக்குள் போட்டுக் குழம்பியவனுக்கு, அந்தத் தொழில் செய்யும் எண்ணமே அற்றுப்போகிறது.

ஒரு ஊரில், ஒரு விவசாயி கோழி வளர்ப்பில் ஈடுபடலாம் என்று முடிவு செய்தான்.அவ்வாறே 100 கோழிகுஞ்சுகள் வாங்கி வளர்க்கத் துவங்கினான்.பக்கத்து ஊரில் கோழிகளுக்கு நோய் பரவுவதாக அறிந்த அவனுக்கு உறக்கம் வரவில்லை.அந்த ஊர்ப்பெரியவர் ஒருவரிடம் யோசனை கேட்டான்.அவர் ஒரு மருந்து சொல்ல, அதனை தன் 25 கோழிகளுக்கு முதலில் கொடுத்தான்.அந்தோ பரிதாபம்! 25 கோழிகளும் இறந்துவிட்டன.இதனால் பக்கத்துப் பண்ணைக்காரரிடம் யோசனை கேட்டான்.பொறாமையால் அவன் ஒரு வகை மருந்தைக் கொடுக்க, அதனால் 50 கோழிகள் இறந்து விட்டன.மீதமுள்ளவற்றையாவது காப்பாற்றவேண்டும் என அவன் நினைக்கையில், அந்த ஊருக்கும் நோய்பரவி 25 கொழிகளும் இறந்துவிட்டன.

பலர் சொல்லும் யோசனைகளைக் கேட்பதில் தவறில்லை. ஆனால், சொல்பவர் யார்? அவர் சொல்வதில் உண்மை இருக்குமா? என எண்ணிப்பார்த்து, அப்படி இருந்தால் மட்டுமே அந்த யோசனையை மனதினுள் விடவேண்டும்! ஆக, எல்லா யோசனைகளையும் மனதினுள் விடுவது பல எதிமறை விளைவுகளை மட்டுமே ஏற்படுத்தும்.

                          ----------

இதுபோல பல கருத்துகளை அவர் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார். வாய்ப்பு கிடைத்தால் அந்த உரையை நீங்களும் கேளுங்கள்.


Tuesday, August 14, 2012

நள்ளிரவில் சுதந்திரம் ஏன்?


ஆங்கில அரசு 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் நாள் இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுப்பதாக சட்டம் இயற்றியது. நம்மவர்கள் அந்த ஆகஸ்டு 15-ம் நாள் அஷ்டமி தினம் என்றும், அன்று நாடு சுதந்திரம் பெற்றால் நாடு நலம் பெறுமா எனவும் ஐயப்பாடு கொண்டனர். 17-ம் தேதி வேண்டுமானால் சுதந்திரம் பெறுவோம்; இவ்வளவு நாள்கள் பொறுத்தோம் இன்னும் இரண்டு நாள்கள் பொறுக்க முடியாதா என அங்கலாய்த்தனர். 

ஐவஹர்லால் நேருவிடம் இதுபற்றி முறையிட்டனர். அவருக்கு அஷ்டமி-நவமி இவற்றில் எல்லாம் நம்பிக்கை கிடையாது. இருந்தாலும் மற்றவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஆங்கில அரசை அணுகினார். சட்டம் இயற்றியாகிவிட்டது. இனிமாற்ற முடியாது என்று ஆங்கில அரசு மறுத்துவிட்டது. நம்மவர்கள் தீவிரமாக யோசித்தனர். 

ஆங்கிலேயர்களுக்கு புதியநாள் அதாவது மறுநாள் என்பது நள்ளிரவு 12 மணிக்கே தொடங்கிவிடுகிறது. ஆனால் நமக்கோ விடியற்காலை ஐந்து மணிக்குத்தான் தொடங்குகிறது. எனவே நள்ளிரவில் சுதந்திரம் வாங்கினால் ஆங்கில அரசுக்கு அது 15-ம் தேதியாகவும் நம்மவர்களுக்கு முக்கிய நாளாகவும் இருப்பதால் அஷ்டமி-நவமி பிரச்னை இல்லாது போகும் என்று நினைத்தனர். இதனால் தான் சுதந்திரத்தை பகலில் பெறாமல் நள்ளிரவில் பெற்றோம்.

Thanks to Dinamani.

Wednesday, August 1, 2012

நான் ரசித்த புத்தகங்கள் - 1


அமரர்.கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் "பொன்னியின் செல்வன்" புதினத்தைப் படித்தபிறகு அவரது முழு ரசிகனாக மாறியவர்களுள் நானும் ஒருவன்.
அதற்குப்பிறகு, எழுதியவர் கல்கி என்றால், பார்க்கின்ற கதைகளைப் படிக்கத் துவங்கிவிடுவேன்.அப்படியாக, நான் வாங்கிப் படித்த சிறுகதைத் தொகுப்பு "வீடு தேடும் படலம்".
அதில்,புத்தகத்தின் தலைப்பாய் கதையின் தலைப்பு கொண்ட, "வீடு தேடும் படலம்" என்ற சிறுகதையைப் பற்றி கொஞ்சம் சொல்ல ஆசைப்படுகிறேன்.


கதையை எப்படி வேண்டுமானாலும் துவங்கலாம்.ஆனால், அந்தத் துவக்கத்தை, கதையுடன் பொருத்துவது எப்படி என பலர் குழம்புவார்கள்.அப்படி எந்தக் குழப்பமும் இல்லாமல் கதை துவக்கப்பட்டுள்ளது அருமை.

அந்தத் துவக்கம் இதோ!

"துவாபர யுகத்து பெர்னார்ட்ஷா என்று பெயர் பெற்ற புரொபஸர் வேதவியாசர் மொத்தம் மூன்றரைக் கோடி வார்த்தைகளைக் கொண்ட பதினெட்டுப் புராணங்களை இயற்றினார் அல்லவா! அந்தப் பதினெட்டுப் புராணங்களையும் நைமிசாரண்ய வனத்தின் சூத புராணிகர் சௌனகாதி முனிவர்களுக்கு எடுத்துச் சொன்னார். அவ்வளவையும் கேட்டுவிட்டு அம்முனிவர்கள் "அடடா! பதினெட்டுப் புராணத்திற்குப் பிறகு பத்தொன்பாவது புராணம் இல்லாமற் போய் விட்டதே! இனிமேல் நாங்கள் எதைக் கேட்டுக் கொண்டு தூங்குவோம்?" என்று புலம்பினார்கள். அதற்குச் சூதர், முனிவர்களே கவலை வேண்டாம். பத்தொன்பதாவது புராணமாகிய கலி புராணம் ஒன்று இருக்கிறது. அதைக் கேட்டுக் கொண்டே நிம்மதியாக தூங்குங்கள்!" என்று சொல்லி கமண்டலத்திலிருந்து ஒரு அவுன்ஸ் தண்ணீர் ஆசமனம் செய்துவிட்டு, பத்தொன்பதாவது கலி புராணத்தைக் கூறத் தொடங்கினார்.

  அவ்வளவு பெருமை வாய்ந்த கலி புராணத்தில் நாட்டுப் படலத்துக்கும் நகரப் படலத்துக்கும் அடுத்தபடியான வீட்டுப் படலம் வருகிறது. வீட்டுப் படலம் என்றும் சொல்லலாம்! வீடு தேடும் படலம் என்றும் சொல்லலாம்! அல்லது ஒன்றும் சொல்லாமல் வாயை மூடிக் கொண்டும் இருக்கலாம். எனினும் "கடமையைச் செய்யுங்கள்!" "கடமையைத் தானே செய்யுங்கள்!" "கடமையைக் கட்டாயம் செய்யுங்கள்!" என்று பகவத் கீதையில் பேராசிரியர் கிருஷ்ணபகவான் முக்காலே மூன்று வாட்டியும் கதறியிருப்பதை முன்னிட்டு, இங்கே நாம் எம் கடமையைச் செய்யத் தொடங்குகிறோம்."

துவக்கம் முதலே வார்த்தைகளில் நகைச்சுவை நெடி மிதக்கிறது.
வார்த்தைகள் படிப்பவர்க்கு புத்துணர்வூட்டுகின்றன.
கடோத்கஜராவ் என்ற ஒருவர், தமது பெரிய குடும்பம் தங்க வீடு பார்க்கிறார்.அவர் குறைந்த விலையில், பேய்கள் இருக்கின்றன என்று சொல்லப்படும் வீட்டை வாங்கத் துணிகிறார்.
பிறகு என்ன நடந்தது என்பது கதை.முதல் முறை அங்கு சென்றபோது,பேயுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.அந்த வரிகளை நினைக்கும்போதே வியப்பு மேலிடுகிறது.என்ன ஒரு கற்பனை! அந்தப் பேச்சுவார்த்தையின் துவக்கம் இதோ!

"யார் அது?" என்றார் கடோ த்கஜராவ்.

     "
நீ யார்?" என்றது ஒரு கம்மலான குரல்.

     "
நான் இந்த வீட்டை வாடகைக்கு வாங்கிக் கொண்டு குடி வரப் போகிறேன். நீ யார்" என்றார் ராயர்.

     "
உனக்கு முன்னால் நான் குடி வந்தவன், உனக்கு இங்கே இடமில்லை. போய்விடு!"

     "
வீட்டு வாடகை அதிகாரியிடம் நீர் அநுமதி பெற்றுக் கொண்டீரா?"
     "இல்லை"

     "
அப்படியானால் இரண்டு பேரும் விண்ணப்பம் போடுவோம். யாருக்குக் கிடைக்கிறதோ, அவர் இருக்கலாம்."

நான் அடிக்கடி படித்துப் பார்க்கும் சிறுகதை இதுதான்.

உங்களுக்கும் படிக்க ஆசை இருந்தால், இணையத்தில் படிக்க  Click Here

Friday, July 27, 2012

ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும்...

எல்லா பெற்றோருக்கும் தங்கள் பெண்ணை ஒரு நல்ல இடத்தில் கட்டி கொடுக்க வேண்டும் என்ற கனவு நியாயமான ஒன்று தான். அவள் பெற்றோரும் அப்படித் தான். மாப்பிள்ளைப் பார்க்க தொடங்கினர்.
படித்த மாப்பிளை , நல்ல வேலையில் கை நிறைய சம்பாதிக்கும் ஒருவன், நல்ல குடும்பம்.


இருவருக்கும் இருவரையும் பிடித்தும் போனது, உடனே நிச்சயம் செய்துவிட்டனர் , தினமும் அழைபேசியில் இருவரும் தங்களைப் பற்றி பேச தொடங்கினர். இருவருக்கும் ஏறத்தாழ ஒரே மனப்பான்மை தான்.இருவருக்கும் பொருந்தி போனது. 


திருமண நாள் நெருங்க நெருங்க வீட்டில் ஒரே பதட்டம். வேலைகள் தலைக்கு மேல் கிடந்தது, இருவர் வீட்டிலும் வேலைகள் துரிதமாக நடந்தேறியது.நாளை திருமணம்.
 
அவள் லேசாக அவள் வீட்டை சுற்றிப் பார்த்தாள். தினமும் அவருடன் பேசியதில் தான் இந்த வீட்டை விட்டு செல்ல போகிறோம் என்று தெரியவில்லை. ஆனால் அன்று ஏதோ ஒன்றை இழக்க போகிறோம் என்று அவள் மனம் பரிதவித்தது. தாயையும். தந்தையையும் பார்த்தாள் எல்லோரும் வேலையில் இருந்தனர். அவள் வீட்டை ஒரு முறை சுற்றி வந்தாள். விரித்த கண்களோடு வீட்டை பார்த்தாள். கண்கள் சுருங்கிய பின்னர் ஓரத்தில் நீர் துளி சொட்டியது.. தங்கையின் புது துணி பரவசத்தில் அக்கா என்று ஓடி வந்தாள்.அவளை பார்த்ததும் "என்ன ஆச்சு அக்கா?" என்றாள். பூ வாங்கினால் கூட சமமாய் வெட்ட சொல்லி சண்டை போடும் அக்கா . இனி நான் யாருடன் சண்டை போடுவேன். இந்த சின்ன சின்ன மகிழ்ச்சிகளை விட்டுக் கொடுத்து விட்டு நான் செல்ல போகிறேனே என்று எண்ணினாள்.அடுப்படியில் பால் கொதித்து கொண்டிருந்தது . ஓடி சென்று அடுப்பை அணைத்து,"அம்மா!பால் வெச்சிட்டு எங்க போனே?",என்று திட்டினாள். அவளைப்  பெற்றவள். அவளை வளர்த்தவள் என்றாலும், அம்மாவை அடிக்கடி திட்டி விடுவதும்,பின் கட்டி அணைப்பதும் இனி கிடைக்குமா?

அப்பா யாருடனோ தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார். அவர் பக்கத்தில் சென்று அமர்ந்தாள். பேசிக் கொண்டே அப்பா இவளைப் பார்த்தார். "அம்மாவை கொஞ்சம் கூப்பிடுமா.." என்று சொல்லி விட்டு மறுபடியும் பேச தொடங்கினார். இவள் எச்சிலையும் சோகத்தையும் தொண்டையில் விழுங்கி விட்டு எழுந்து அம்மாவை அழைத்து விட்டு, வீட்டின் வெளியில் உள்ள மாடிப்படியில் உட்கார்ந்தாள். எங்கிருந்தோ, "அடியே!உள்ள போ. கறுத்துர போற! நாளைக்கு கல்யாணத்த வெச்சிக்கிட்டு இங்க வந்து உட்கார்ரா பாரு!" என்று எப்பொழுதும் எதையாவது சொல்லி கொண்டிருக்கும் பாட்டி. எரிச்சலுடன் பாட்டியிடம் எப்பொழுதும் பேசும் அவள் அன்று பாட்டி சொன்னதை கேட்காமல் பாட்டியை முறைத்துப் பார்த்தாள். முகம் அப்படியே அழுவது போல மாறியது. பாட்டி உடனே,"என்னடி என்ன ஆச்சு!",என்று பதட்டத்துடன் கேட்டாள். அழுகை அருவிப் போல் பொங்கியது.உள்ளே ஓடி சென்று விரக்தியுடன் "அம்மா..அப்பா என்று கத்தினாள்.எல்லோரும் ஏதோ என்று பயந்துக்கொண்டு உடனே ஓடி வந்தனர். "அம்மா நான் போகமாட்டேன். இங்கேயே இருந்துடுறேன். உங்களை விட்டு நான் எப்படி செல்வேன். அங்க எப்டி இருக்குமோ. எனக்கு பயமா இருக்கு. நான் போகலை..",என்று மெல்லிதாய் அழுதாள். உடனே அப்பாவின் மனம் அழுதது. அம்மா சமாதானம் சொன்னாள். அப்பாவுடன் அவ்வளவு நெருக்கம் இல்லாமல் இருந்தாலும் அப்பாவிற்கும் பெண்ணிற்கும் உள்ள அந்த பாசம் வார்த்தையில் வருணிக்க முடியாதது . தங்கை குலுங்கி குலுங்கி அழுதாள். "அக்கா அழாதேக்கா! மாமா உன்ன நல்லா பார்த்துப்பாருக்கா!" என்று வெகுளி பேச்சில் சமாதானம் செய்தாள். அன்றிரவு அவளுக்கு பிடித்த அத்தனையும் சமைத்தாள் அம்மா. ஆனால் அவள் புண்பட்டு போயிருந்தாள்.நாளை திருமணம். போகும் இடம் சொர்கமோ, இல்லையோ என்றெல்லாம் தெரியாது.ஆனால் அவள் வாழ்ந்த ஒரு சொர்கத்தை விட்டு மட்டும் அவள் செல்ல போகிறாள்.

திருமணம் என்பது ஆண்களின் வாழ்வில் ஒரு நிகழ்வு. ஆனால் ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் அது மாற்றம்.அவள் வாழ்ந்த வீட்டிலிருந்து அவளை வேரோடு பிடிங்கு எடுத்து மற்றொரு இடத்தில் நட்டு வைக்கும் விழா தான் திருமணம் . துளிர்ந்த பெண்களும் உள்ளனர். பட்டுப்போன பெண்களும் உள்ளனர்!

நன்றி :Harini Nagaraj

Tuesday, June 12, 2012

சாகக் குடி!


துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.
கடந்த வெள்ளிக்கிழமை, இந்தக் குறளின் காட்சிவிளக்கத்தை, காந்திபுரம் பேருந்து நிலையத்தில் காணமுடிந்தது.

பேருந்து நிலையம் அருகில் செல்லும் நெடுஞ்சாலை, எப்போதுமே நெரிசல் மிகவே இருக்கும்.அன்றும் அப்படித்தான்.சின்ன இடைவெளி கிடைத்ததும் நான் ஓட்டமாக சாலையைக் கடந்து, பேருந்து நிலையத்துக்குள் நுழைந்தேன்.ஓரிடத்தில் ஒரு சிலர்
கூடி நிற்பதைப் பார்த்து அங்கே சென்றேன்.வேடிக்கை பார்ப்பது நம்மவர்க்கு புதிதல்லவே!

காவல் துறை அதிகாரி அங்கே போக்குவரத்தை ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்தார்.இந்தக் கூட்டத்தை அவ்வப்போது கலைத்துக் கொண்டும் இருந்தார்.அங்கே ஒரு இந்திய "குடிமகன்",சுயநினைவே இன்றி படுத்துக்கிடந்தான்.அவன் இவன் என சொல்வதில் தவிறில்லை என நினைக்கிறேன்.எதிரில் ஒரு பிரபல புத்தகக்கடை.இந்த ஆளை எழுப்பும் முயற்சியில் அவர்கள் ஒரு குடம் நீரை வீணாக்கியதை உணரமுடிந்தது.

ஆனாலும் ஒரு துளி அசையாமல் படுத்துக்கொண்டிருந்தான்.நான் முதலில் பார்த்தபோது செத்துவிட்டானோ எனத் தோன்றியது.இரண்டு நிமிடம் உற்று பார்த்தபோது மூச்சுவிடுகிறான் என்பதன் அறிகுறி தெரிந்தது. பிறகு நான் அந்த இடத்தைவிட்டு
அகன்றுவிட்டேன்.
[களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ அற்று]
ஒருவன் குடிபோதையில் இருக்கும் போது அவனுக்கு உதவி செய்வதோ புத்திமதி கூறுவதோ வீண்வேளை என வள்ளுவர் இன்னொரு குறளிலும் சொல்லி இருக்கிறார் அல்லவா.நமக்கேன் வம்பு என பேருந்தில் ஏறி ஊர் சென்றேன்.
 [கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொளல்]
இப்படி உணர்விழந்து,மானம் இழந்து மதி கெட்டு நம்மை மற்றவர் கேவலமாகப் பார்க்கும்படி செய்யும் மதுவினை, காசு கொடுத்து
அவன் வாங்கிப்பருகுவதை என்னவெனச் சொல்வது?
[கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு]
 இவன் மது மயக்கத்தில் இல்லாத போது, இவன் இபோது கிடக்கும் நிலையில் உள்ள மற்றொருவனைப் பார்த்தாலாவது
இவனுக்குள் மாற்றம் வருமோ என்னமோ? வள்ளுவனின் அதே கேள்வி எனக்கும்!!


Thursday, June 7, 2012

மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன?


1. பள்ளி அலுவலக நேரம் தெரிந்து அதற்குமுன் தயாரித்தல்.

2. காலையில் முன் எழுந்திருத்தல்.

3. எப்போதும் சிரித்த முகம்.

4. நேரம் பாராது உபசரித்தல்.

5. மாமியாரை தாயாக மதிக்க வேண்டும்.

6. கணவன் வீட்டாரிடையே அனுசரித்துப் போக வேண்டும்.

7. எதற்கெடுத்தாலும் ஆண்களைக் குறை சொல்லக் கூடாது.

8. அதிகாரம் பணணக் கூடாது.

9. குடும்ப ஒற்றுமைக்கு உழைக்க வேண்டும். அண்ணன், தம்பி பிரிப்பு கூடாது.

10. கணவன் குறைகளை வெளியே சொல்லக்கூடாது. அன்பால் திருத்த வேண்டும்.

11. கணவனை சந்தேகப்படக் கூடாது.

12. குடும்பச் சிக்கல்களை வெளியே சொல்லக் கூடாது.

13. பக்கத்து வீடுகளில் அரட்டை அடிப்பதைக் குறைக்க வேண்டும்.

14. வீட்டுக்கு வந்தவுடன், சாப்பிடும் போது சிக்கல்கள் குறித்துப் பேசக் கூடாது.

15. கணவர் வழி உறவினர்களையும் நன்கு உபசரிக்க வேண்டும்.

16. இருப்பதில் திருப்தி அடைய வேண்டும்.

17. அளவுக்கு மீறிய ஆசை கூடாது.

18. குழந்தை படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.

19. கொடுக்கும் பணத்தில் சீராகக் குடும்பம் நடத்த வேண்டும்.

20. கணவரிடம் சொல்லாமல் கணவரின் சட்டைப் பையிலிருக்கும் பணத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது.

21. தேவைகளை முன் கூட்டியே சொல்ல வேண்டும்.

22. எதிர்காலத் திட்டங்களைச் சிந்திக்கும் போது ஒத்துழைக்க வேண்டும்.

23. தினமும் நடந்ததை இரவில் சொல்ல வேண்டும்.

24. தாய் வீட்டில் கணவரை குற்றம் சொன்னால் மறுத்துப் பேச வேண்டும்.

25. அடக்கம், பணிவு தேவை. கணவர் விருப்பத்துக்கு ஏற்றாற் போல் ஆடை, அலங்காரம் செய்ய வேண்டும்.

26. குழந்தையைக் கண்டிக்கும் போது எதிர்வாதம் கூடாது.

27. சுவையாகச் சமைத்து, அன்புடன் பரிமாற வேண்டும்.

28. கணவர் வீட்டுக்கு வரும் போது நல்ல தோற்றம் இருக்கும்படி வீட்டை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும்.

29. பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

30. உரையாடலில் தெளிவாகப் பேசுவதுடன், பொருத்தமான முறையில் எடுத்துரைக்கும் விதமும் தெரிய வேண்டும்.

31. தேவையற்றதை வாங்கிப் பண முடக்கம் செய்யக் கூடாது.

32. உடம்பை சிலிம் ஆக வைத்துக் கொள்ள வேண்டும்.

Thursday, May 31, 2012

கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன?




* அன்பாக, பிரியமாக இருக்க வேண்டும்.

* மனது புண்படும்படி பேசக்கூடாது.

* கோபப்படக்கூடாது.

* சாப்பாட்டில் குறை சொல்லக்கூடாது.

* பலர் முன் திட்டக்கூடாது.

* எந்த இடத்திலும் மனைவியை விட்டு கொடுக்கக்கூடாது.

* முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.

* மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.

* சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்.

* மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.

* பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.

* வாரம் ஒரு முறையாவது மனம் விட்டுப் பேச வேண்டும்.

* பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.

* ஒளிவு, மறைவு கூடாது.

* மனைவியை நம்ப வேண்டும்.

* முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.

* தனக்கு இருக்கும் கஷ்டம், தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.

* உடல் நலமில்லாத போது, உடனிருந்து கவனிக்க வேண்டும்.

* அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா, தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி.

* நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.

* எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டு, செல்ல வேண்டும்.

* மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்.

* மனைவிக்குப் பிடித்தவற்றை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

* பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது.

* மனைவி வீட்டாரை குறை சொல்லக்கூடாது.

* கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்.

* சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.

* எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.

 * சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும்.

* சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.

* சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.

* குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் இது உன் குழந்தைஎன்று ஒதுங்கக்கூடாது.

* மனைவியிடம் அடுத்த பெண்ணை பாராட்டக்கூடாது.

* அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்படவேண்டும்.

* மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.

* ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.

* வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும்.

More:

காதலிப்பது எப்படி? (சிரிப்பதற்கு மட்டும்)